உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போய் படார் என்று தரையில் அடித்து அதனால் திடுக்கிடுவதைக் கண்டு சிரித்து மகிழுகிறான்.

உள்ளே நாதசுரக்காரன் குரலெடுக்கிறான். சாதாரணக் கலியாணம் என்பதைக் காட்டும் சாதாரணத் திறமை.

பட்டு வேஷ்டி அலங்காரத்துடன் இருக்கும் பையன், ரொம்ப பெருமையாக முகத்தை வைத்துக்கொண்டு, அப்பொழுதுதான் அங்கு வந்த ஒருவனிடம் "எங்கப்பாவுக்கு கலியாணம்டா?" என்று பெருமையடித்துக்கொண்டான்.

கேட்டவன், சொன்னவனுடைய அறியாமைக்குப் பரிதவிப்பவன் போல "இவுங்க அப்பாவுக்காண்டா எங்க மதினிக்கு கலியாணன்டா?" என மற்றவர்களுக்கு உண்மையை நிர்த்தாரணம் செய்து பாராட்டு தலை சுற்றும்முற்றும் எதிர்பார்க்கிறான்.

"எங்கப்பாவுக்குத்தாண்டா?" எனக் கிரீச்சிட்டுக்கொண்டு, "கலியாணக் கடுதாசிலேகூட அச்சுப் போட்டிருக்கு" என்றவாறு இடுப்பில் சுற்றியிருந்த பட்டு லேஞ்சியை அவிழ்த்து கந்தரகோளமாகக் கழுத்தில் போட்டுக்கொண்டு, துருத்திக்கொண்டிருந்த மடிப் பொட்டளத்தை அவிழ்க்கிறான். அதில் ஒரு லட்டு, கசங்கி வெதும்பும் ஒரு கட்டு வெற்றிலை, சாயப் பாக்கு வகையறாக்களுடன் நசுங்கும் கலியாணக் கடுதாசியை வெளியே எடுத்து நிமிர்த்தி விரித்து, எழுத்துக்கூட்டி பெயரை வாசிக்க ஆரம்பிக்கிறான்.

"ஏ. எஸ். சு. இந்-தி-ர-வடி - வடி... வேலுப் பிள்ளை!"...அதே சமயத்தில் எதிர்க்கட்சியாடிய பையன்:

"ம - ர - க - தா - ம் -பா -ள்... எங்க அப்பா!"

"எங்க மதினி!"

"அப்படின்னா நாம சொந்தம்!" என்று கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு இறுக்குகிறான் மாப்பிள்ளையின் மகன்.

அதே சமயத்தில் கூட்டத்திலிருந்து இன்னொருவனுக்குப் பூவரச மரத்தில் ஏறி தழை பிடுங்கி ஊதல் செய்யவேண்டுமென்று தோன்றி விடுகிறது. விருவிருவென்று ஏறி கிளையில் உட்கார்ந்துகொண்டு ஒரு இலையைச் சுருட்டி வாயில் வைத்துக்கொண்டு ஊதுகிறான். அந்த சப்தத்தைக் கேட்ட மற்ற சிறுவர்கள் இலைக்காகக் கெஞ்சுகிறார்கள்.

கிளை கிளைகளாக ஒடித்துப் போடுகிறான் உயர இருப்பவன்.

கீழே ரகமயமான ஊதல் சப்தம்.

சுந்தரவடிவேலுப் பிள்ளையின் மகனும் ஒரு இலையை எடுத்துக் கொண்டு யாரும் பிடுங்கிக்கொள்ளாமல் தூரத்தில் ஓடி நின்று கொண்டு சுருட்டி வாயில் வைத்துக்கொண்டு ஊதுகிறான். அவசரத்தில் உருட்டியதால் சத்தம்... பக் - பக் - என திக்கித் திக்கி தாரை வாசிக்கிறது.

அச்சமயம் கலியாண வீட்டை நோக்கி ஒரு பெரியவர் கையில் மடிசஞ்சி மூட்டையுடன் நடந்து வருகிறார்.


புதுமைப்பித்தன் கதைகள்

719