உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓலைக் கூரையும் நிறைந்த திரடு தென்படும். அதுதான் மருகால்புரம். அந்தவூரிலிருந்து பார்த்தாலே மேலக்கல்லூரில் ரயில் புறப்பட்டு, புகை கக்கிக்கொண்டு, சேர்மாதேவி நோக்கிப் போவதைப் பார்க்கலாம். தூரத்துப் புகை, வான வளையத்துடன், இரும்பு நாகரிகமும் மறுகால் புரத்துக்கு மதில் அமைப்பது தெரியும். காற்று ஊர்த்திசை அடித்தால் ரயில் ஊதுகுழல் சத்தம் அந்தவூர்க் கெடிகாரம். ஊர் கிராம முனிசிபு பிள்ளை தம் வீட்டு பெட்டகசாலையில் உள்ள பெரிய கடிகாரத்தை திருப்பி வைத்து, மணியடித்து அறிவிக்கும்போது சுமாராகவாவது எண்ணிக்கை வித்தியாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவார். ஜமாபந்திக்கு வந்திருந்த தாசில் ஐயர் ஒருவர், உதய காலத்தில் இவர் வீட்டு கெடிகாரம் பனிரெண்டு அடிப்பதைக் கேட்டுவிட்டு, நடுச் சாமம் என்று நினைத்து படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டு தூங்கிவிட்டு ரயிலைத் தப்பவிட்டதாக சொல்லிக் கொள்ளுவார்கள்.

கிராம முனிஸீப் வேலாயுதம் பிள்ளை கிராமத்துக்கு யோக்கியர்; முடிசூடா மன்னன். அந்த குறுகலான திரடில் 1935 வருஷத்து இந்திய சர்க்கார் சட்டத்தின் தூண். கிழக்கு இந்திய கம்பெனி முதல் சர்வே செய்த காலம் துவங்கி நாளது தேதிவரை அவரது குடும்பமே கிராமத்து முனிசீபு உத்யோகத்தைத் தாங்கிவருகிறது. கணக்க பரம்பரையை அப்படிச் சொல்ல முடியாது. விக்கிரமசிங்கபுரத்து பாப்பு பிள்ளை முதல், வீரவநல்லூர் கணக்க முதலியார் குடும்பமும், இடையிடையே உசேனி ராவுத்தர் வாரீசுகளும் நிர்வகித்து வந்தன. இப்பொழுது இருந்து வருபவர் முதலியார். அவரது ஓநாய்ப் பசியே கிராமத்துக்குள் அற்பத்துக்கு அற்பமான காரியாதிகளில் அவரை அழைத்துச் சென்றது. "அந்த விடியாமூஞ்சியை விரட்டிவிட்டு, உசேனிவாப்பா பேரனைக் கொண்டு வந்து வைத்தாலாவது ஊரு யோக்கியமாக இருக்கும்" என்பது வேலாயுதம் பிள்ளை ஒளிக்காமல் விளம்பும் வார்த்தை.

தலையாரித் தேவன் குடும்பமும் கிராம முனிசீபுடையது போல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஜண்டா அந்தத் திரடில் பறக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்த அலுவலை மேற்கொண்டு வருகிறது. சட்டப்படி அவனுடைய குடும்பம் ஊரின் எல்கைக்கு அப்பால் வேற்றூர்ச் சரகத்தில் இருந்தாலும், நெடுங்காலத்து வளமுறையால் அவன் பேருக்கு இருக்கும் காலிக் குடிசை அவன் வழக்கமாக குடியிருக்கும் இடமாக, வெளியூர்களிலிருந்து வரும் உத்யோகஸ்தர்களுக்கும், சர்க்கார் சட்டத்துக்கும், அவன் பந்தகப்பட்டிருப்பதுபோல காட்டியது. புலிக்குட்டி வேலையா என்றால் மூன்று தலைமுறைகளுக்கு முந்தி, அதாவது முதல் சர்வே நடக்கிற காலத்தில், தர்மத்துக்கும் சொல்லுக்கும் கட்டுப்பட்டு கொள்ளைத் தொழிலை ஜீவனோபாயமாக நடத்தி வந்த சிங்கம். அவனிடம் எதை வேண்டுமானாலும் தைரியமாக ஒப்படைத்து பார்த்துக் கொள்ளும்படி சொல்லலாம். ஈ, காக்கா நாடாமல் காப்பான். மனசில் கொஞ்சம் கடுப்பு ஏறிவிட்டாலோ, அவ்வளவுதான். சுட்டு சுடுகாடாக்கி எருக்கு விதைத்து விடுவான். கட்டபொம்மு சண்டையில், வெள்ளைக்காரர் மேலிருந்த

புதுமைப்பித்தன் கதைகள்

743