உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குரோதத்தால் அவன் படையில் சேர்ந்து பிறகு, அந்த ஆசை சிதறியதும் மறுகால்நல்லூர் கிராமத்து தலையாரி ஆனானாம். அவனைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அத்தனையும் வேதம்போல அந்த பிராந்தியத்து மறக்குலத்துக்கு எழுதாக் கிளவி. அவன் கிளை வீரன்முடிதாங்கி, தன் வம்சத்தில், அந்தச் சிங்கம் உதிக்க வேண்டும் என்று கொண்டையன்கோட்டையானான தன் மகனுக்கு வீரம்முடிதாங்கிப் பெண்ணைப் பார்த்து கலியாணம் செய்துவைத்தானாம். கடைசிக் காலத்தில் அவன் சாவும் ரண களத்தில்தான். முதல் சர்வே அல்லவா. வரி வசூல் தகராறு ஏற்பட்டு, களத்து மேட்டில் கொடுக்கரிவாளுக்கு இரையானான். பெயரனைப் பார்த்து தன் ரத்தத்தை சிசுவின் நெற்றில் பொட்டிடும்வரை எமனை எட்ட நில் என்று சொன்னவன் புலிக்குட்டி வேலையா. ரத்தப் பொட்டு இட்டுக் கொண்ட சிசுதான் இப்போது தலையாரி உத்யோகம் பார்க்கும் சின்னக்குட்டி வேலையா. இவனும் ரணக் காட்டேரிதான். கிரிமினல் புரொஸிஜர் கோடும், குற்ற பரம்பரை சட்டமும், கிராம முனிஸீப் வேலாயுதம் பிள்ளையின் சகவாசமும் அவனை வேறு மனிதனாக்கியது. கோபத்தில் சற்று புருவம் நெறிந்தாலே எதிரே நிற்பவர்கள் சுருண்டு விழுந்து விடுவார்கள். ஆனால் பரம சாது. செவிட்டில் அடித்துவிட்டாலும், 'சவம் புத்தியில்லாக் களுதை' என்று உதறித் தள்ளி பொருட்படுத்த மாட்டான். தன் பலத்தில் அவ்வளவு நம்பிக்கை. எதுவும் பிரமாதமாகத் தெரியாது. ஆனால் தர்மப்பிசகு, அனியாயம் என்று அவனுக்கு ஏதாவது தென்பட்டால் யாரிடமும் அதைச் சொல்லத் தயங்க மாட்டான். "யாரானால் என்ன, இந்த உடம்பு மனுசனுக்கு கட்டுப்படாது, தருமத்துக்குத்தான் கட்டுப்படும்" என்று அடிக்கடி சொல்லுவான். ஆனால் அவன் தருமம் என்று கருதியுள்ள விஷயங்களின் பட்டியல் ரொமபவும் சுருக்கம். அந்த சுருக்கமான தர்ம பீடகம் அவனை அறுபத்தியைந்து வயசுவரை கவுரவத்துடன் ஆயுசைக் கழித்துவிட உபகாரமாக இருந்தது. அவனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் கருப்பையா. வயசு பதினெட்டுதான்; என்றாலும் பதினெட்டும் படித்துத் தேறி விட்டான். நிலையற்ற தேட்டம். கண் நிறைந்த அழகு, 'கருப்பையாத் தேவர்' என்றே எல்லாரும் தன்னைக் கூப்பிடவேண்டும் எனற மிடுக்கு, நெஞ்சிலே எங்கோ பதுங்கிக் கிடக்கும் நல்ல குணம் - இதுதான் கருப்பையா. "கருப்பையா இல்லாத சண்டை ஒரு சண்டையா" என்பார்கள் அவனது கூட்டாளிகள். சின்னக்குட்டி வேலையாவுக்கு மட்டும், அவனை எப்போதும், "ஏ கருப்பையா, ஐயா, கரியையா, இங்கே வாலே மூதி" என்று அழைப்பதில் ஒரு ஆத்ம நிறைவு. "வெள்ளாளன்கூட நடந்தா, வெள்ளாட்டுப் புத்திதான் வரும்; எங்கப்பென் சாதி மறவனா காங்கலெ" என்று குறைபட்டுக் கொள்ளுவான் கருப்பையா அதாவது தகப்பனார் இல்லாத நேரம் பார்த்து.

இத்தனை பேரும் மறுகால்நல்லூர் கிராமத்து அட்டதிக்குக் காவலர்கள், நன்மையோ, தீமையோ முதலில் அவர்களை நாடாமல் அவ்வூருக்குள் புகாது. இவர்களைத் தவிர அவ்வூரில் வேறு பலரும்

744

அன்னை இட்ட தீ