உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சற்றும் வகைவைப்பதில்லை. உழைக்கவோ பிழைக்கவோ தெரியாத ஊமைச் சனங்கள் என்று பரிதாபப்படுவார்கள்.

அந்தவூருக்கு புதுக்குடிகள் இப்போது இரண்டு பேர்தான். இரண்டு பேரும் இரண்டு விதமானவர்கள். ஒன்று நொடிந்து சிதறிய குடும்பத்தின் சிறு சிதல். மற்றது, வாழ்வில் இருபத்தியைந்து வருஷங்கள் யூனியன் ஜாக் நிழலிலே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வந்த ஒரு அன்னிய ஸ்தாபனத்தின் வரி வசூல் இலாகா உத்யோகஸ்தராக, உத்தரவு, மேலுத்தரவு, இடமாற்றம், ஜமாபந்தி என்ற எல்லைக்குள்ளாக மனிதர் வேறு உத்யோகஸ்தர்கள் வேறு என நினைத்து வாழ்ந்து விட்டு, அந்தப் பழக்க வாசனையை மறக்க முடியாமல் தனக்கு சற்றும் பொருளற்றுத் தெரியும் உலகத்துடன் அளவளாவ மறுத்து ரெவின்யூ ஷரத்துகளுக்குப் பதிலாக, அதே அந்தஸ்தில் தேவாரப் பதிகங்களை வைத்து அதைக் கொண்டு உத்யோகம் நடத்தி வரும் ஆலம் உகந்த பெருமாள் பிள்ளை என்ற ஏ. யு. பெருமாள் பிள்ளை பென்ஷன் தாசில்தார்.

அவருக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி; சென்னை சர்வகலாசாலையிடம் பி. ஏ. பட்டம் பெற்ற பிறகும், கற்ற படிப்பின்மீது வாஸ்தவமான ரசனைப் பேறு கிட்டிய மகன். தாசில் பிள்ளையுடன் இருபத்தியைந்து வருஷங்கள் தென்னார்க்காடு ஜில்லாவை வளைய வளைய வந்ததினால் குடல் சம்பந்தமான, வைத்தியர்களுக்கே பிடிபடாத ஒரு நோய் அந்த அம்மாளை சென்ற பத்து வருஷங்களாக வாட்டி வருகிறது. டாக்டர்கள் எத்தனையோ பேர், எத்தனையோ விதமான சிகிச்சை எல்லாம் செய்து பார்த்தும் புலப்படாத நோய் அது. "உன் உடம்புக்கு என்ன?" எனறால் "எல்லாம் மனக்கவலைதான்; நோயும் நொடியும் மனுசரைப் படுக்க வைத்துவிடுமா" என்று சொல்லி விடுவாள். "உனக்கென்னமா கவலை" என்றால் அவளுடைய உதட்டிலே ஒரு பரிதாபகரமான புன்சிரிப்பு நெளிந்து மறையும். உலகத்தின் துயரங்கள் எல்லாம் அந்தச் சிரிப்பில் நெளிந்து மறைவது போல இருக்கும் அப்போது அவளைப் பார்ப்பவர்களுக்கு.

திடீரென்று ஆரோக்கியமாக இருந்தவனுக்கு நோய் வந்தால்தான் குடும்பத்தின் நிதானத்தன்மை கலைந்து, மனது, படுத்துக் கிடப்பவரை வளைய வந்து வட்டமிடும். நிரந்தர நோயாளியாக பாயும் படுக்கையுமாகிவிட்டால் தினம் பார்வையில் எதிர்ப்படும் தட்டுமுட்டு சாமானுக்கும் நோயாளிக்கும் பரம வித்தியாசம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இருக்காது. படுத்திருப்பவர் பற்றி கவலை இருக்காது என்பதில்லை. படுத்திருப்பவர் பற்றி சதா நேரமும் சிந்தனை இருக்காது.

தாசில்தாரிணி மயிலம்மையின் நிலைமையும் அப்படித்தான். வாரத்துக்கு இரண்டு தடவை சேர்மாதேவி டாக்டர் வீரபத்திர பிள்ளை வந்துவிட்டுப் போவார். பிள்ளையவர்களுக்கு ஹிந்து பத்திரிகை வருவது போல இருபத்திநான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை, "மூன்று வேளைக்கு; சாப்பிடும்போது குலுக்கிச் சாப்பிடவும்" என்ற உபரி யோசனைகளுடன் மருந்துப் பாட்டில் வரும். ஹிந்துப்

746

அன்னை இட்ட தீ