பத்திரிகை கவர் திறக்கப்படாமல் கிடப்பதுபோல மருந்துப் பாட்டிலும் கார்க் திறக்கப்படாமல் இருந்து மறுநாள் மருந்துக்கு ஆள் போகும்போது பாட்டில் சுத்தமாக கழுவி அனுப்பப்படும். மருந்து வரும், பத்திரிகை வரும், வசந்தம் வரும், வேனில் வரும், மாரி, வாடை எல்லாம் மாறி மாறி மாறி வந்துகொண்டிருக்கும்; டாக்டர் வீரபத்திர பிள்ளை மருந்து வந்துகொண்டிருக்கும். மயிலம்மை நோய் மட்டும் இருந்துவரும்.
ஆலமுகந்தவரின் ஏக புத்திரன் சுப்பிரமணியம் பி. ஏ., தேறும்வரை கஷ்டம் என்பது என்னவென்று தெரியாத வாழ்வு. பாட புஸ்தகங்கள், காலேஜ் வாசகசாலை புஸ்தகங்கள், நல்ல உடை, நேரத்துக்கு சாப்பாடு, இலலையே என்று ஏங்க வேண்டாத நிலையில் பணம் எல்லாம் அவனுடைய மனப்பக்குவத்துக்கு உற்ற துணையாக இருந்தது. இல்லை என்ற வார்த்தை அவன் வாயில் வராது. காலேஜில் அவன் படித்து வரும்போது அவனுடைய நிழலில் ஒதுங்கி, வறுமையின் நெடி வாட்டாமல் தப்ப முயன்ற சகபாடிகள் பலர் உண்டு. யாரிடமும் லேசில் பழக மாட்டான்; பழக்கம் ஏற்பட்டால் லேசில் ஒடிபடுவதற்கு அவன் இடம் கொடுக்கவும மாட்டான். தாயார் என்றால் அபார வாஞ்சை. தங்கை கிடையாது; ஆகையால பெண்கள் மனசை லகுவில் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி அவனிடம் இல்லை. நாட்டு மண்ணில் பிறக்காத ஜூலியட்டுகளும், ரோஸலின்டுகளும் யுவதி என்ற வார்த்தைக்கு அவன் மனசில் பொருள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். துன்பமே அவன்மீது படியாததினால், எதிராளி சொல்லும் வார்த்தைக்கு மாற்று உரைத்துப் பார்க்கும் குணம் அல்லது (கல்மிஷம்) அவனிடம் கிடையாது.
பூர்ண பொறுப்பையும் உணராது தேச சேவை, தேசபக்தி என்ற அக்னி லக்ஷியங்களை கனவுக் கண் கொண்டு பார்த்து, அவற்றை சந்திரகாந்தக் கல் மண்டபங்களாக நினைத்தான். வெள்ளைக்கார பர்க்குகளும், பெயன்களும், கிபன்களும், மில்களும் சமுத்திர கோஷம் போன்ற சொல்லடுக்குகளால் தன் மனசைக் கவர்ந்து அதுவே தர்மம் என்று இவனைக் கருதும்படி செய்திருந் தாலும், அவர்களது உபதேசங்களைப் பொறுத்தவரை, இவன், ஏகலைவன், படித்ததற்காக கட்டை விரலை தானம் கொடுக்க வேண்டியவன்தான் என்பதை அறியமாட்டான். அகில இந்திய காங்கிரஸ் வருஷா வருஷம் கூடுவதும், லக்ஷிய புருஷர்கள், லக்ஷிய புருஷத்தனத்துடன் பேசுவதும், லக்ஷிய பௌருஷத்துடன் செயலில் இறங்குவதும், சிறைப்படுவதும் அவனது மனசில் பெருங்கோயிலைக் கட்டியிருந்தது. அவன் பட்டணத்தில் படித்திருந்தானாகில், இந்தக் கனவு எல்லாம் முளையிலேயே தீய்ந்து வடுத்தெரியாமல் மாற்றி விடுவதற்கு அரிய சாதனங்கள் பலவுண்டு. அழகான உடைகள் அணிந்து அலங்காரமாக பேசும் நாரீமணிகளை கல்வித் தோழர்களாகப் பெற்றால் அதற்கேற்ற அந்தஸ்துடன் இருக்க ஆசைப்பட்டிருப்பான்; அல்லது சென்னை சர்வகலாசாலை வாசக சாலையில்
புதுமைப்பித்தன் கதைகள்
747