உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளைக்காரரின் மேல்நாட்டு கலாச்சார பிரகாசத்தின் மகத்துவம் வெளிப்பட்டிருக்கும். "அப்பா உனக்கு சுதந்திரத்தின் மகிமைகளைப் பற்றிப் போதிப்போம்; ஆனால் அவற்றை உனக்கு என்று எண்ணி மதி மயங்கிவிடாதே" என்று அங்கு ஒரு கற்சிலை நந்திகேசுவரர்போல, புஸ்தக அலமாரிகளை நாடுமுன் நம்மை வழிமறிக்கிறது. அதையாவது பார்த்து தெரிந்துகொண்டிருப்பான். இவ்விரண்டு செல்வங்களும் வாய்க்கப் பெறாததினால், அவன் தேசபக்தியில் ஏதோ உண்டு என்று கோழிக் கனவு கண்டுகொண்டிருந்தான். நாம் கத்திரித் தோட்டம் போட்டால், கத்திரிச் செடிகளுக்கு சுய நிர்ணய உரிமை நாம் கொடுப்போமா. கொடுத்தால் நம் வீட்டு சாம்பாரில் கத்திரிக்காய் மணக்குமா? இந்த மாதிரி இந்தியாவும் வெள்ளைக்காரனுடைய கத்திரித் தோட்டமாக இருக்கிறது. அதற்காக வெள்ளைக்காரனை அரக்கன், பேய், பிசாசு, பாபத்தின் அவதாரம் என்று சொல்லுவது அபச்சாரம் என்பது தெரிந்திருக்கும். சுப்பிரமணியம் மனோவுலகத்தில் இரண்டுவிதமான வெள்ளைக்காரர்கள் குடியிருந்தார்கள்; தொடர்பற்று தனித்து அக்ரஹாரமும் சேரியும் போல தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். இவர்களிடை இருந்த ஏகத்தன்மையைப் புரிந்துகொள்ள சுப்பிரமணியனுக்கு அனுபவமும் இல்லை வழி காட்டுவோரும் கிடையாது.

சிறுவயசில் டவாலிச் சேவகன், ஆபிஸ் பெட்டி, ஜரிகைத் தலைப்பாகை முதலியவற்றையெல்லாம் வைத்து தகப்பனார்மீது இருந்து வந்த மதிப்பு பெருமையெல்லாம், எப்போதோ கண்ட சொப்பனமாக அடிபட்டு போய்விட்டது. காலேஜ் படிப்பு ஏற ஏற அவர்மீது சாதாரணமாக இருக்கவேண்டிய வாஞ்சையும், கொடுக்கவேண்டிய கவுரவமுமே படிப்படியாக அஸ்தமித்து, அவரைப் பற்றி நினைக்கும் போதும் பேசும்போதும் அவமானமே மிஞ்சி நின்றது. மாதம் ஒரு தரம் பென்ஷன் வாங்குவதற்கு, தமது பழைய உருமால்களையும் ஜரிகைத் தலைப் பாகைகளையும் உதறிக் கட்டிக்கொண்டு மாட்டு வண்டியில் ஆரோகணித்துச் சென்று, பதினோரு மைல் தொலைவுள்ள திருநெல்வேலி ஜங்ஷனுக்கு இரண்டாவது வகுப்பு ரயில் வண்டியில் ஏறி உட்கார்ந்து படாடோபம் பாக்கியில்லாமல் காட்டிக் கொண்டு கொக்கிரகுளம் கலெக்டர் ஆபீசில் சென்று நான் இன்னும் உயிரோடிருக்கிறேன், எனக்கு உபகாரச் சம்பளம் கொடு என்று அழகும், எடுப்பும் குடியோடிப் போய் மாமாங்கம் பல கழிந்தும் ஜீவனாம்சம் கேட்டுத் தேடிவரும் வைப்பாட்டி போல, கொடுக்கும் சம்பாவணையை வாங்கிக்கொண்டு திரும்புவதும், பிறகு அந்த ஒரு நாள் போக மற்றும் மாதப் பொழுதை ஞானசம்பந்தரின் தேவாரப் படிப்பிலும், அது ஒழிந்த வேளைகளில் தன்னை சம அந்தஸ்தில் சந்திக்க வருவோரிடமும் கச்சேரி நடத்தியும் வாழ்வே தெரியாத இளங்கன்றுக்கு மனசில் அரோசிகத்தை எழுப்புவது அதிசயமில்லை. அவர் பென்ஷனாகியும் கச்சேரி பண்ணும் விந்தைகளுக்கு உடம்பட்டு வரும் கிராமத்து ஊமைச் சனங்களைக் காணும்போது தான் ஆத்திரம் அகாதமாக வரும்.

748

அன்னை இட்ட தீ