முன்போ படிக்கப் போகிறேன் என்று வருஷத்தில் குறைந்த பட்ச நாட்களில் மட்டும் அவருடன் ஒரே வீட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது. படிப்போ முடிந்துவிட்டது. அம்மாதிரி இனிமேல் வீட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு தகுந்த வியாஜமே கிடையாது.
மனக்குமுறல்களையும் பொறுமல்களையும் உன்னிப்பாய் தெரிந்து கொண்டு, தலை சுற்றி ஆடி, காற்றோடு பொறுமும் பனை விடலிகளே சரணாகதி. காற்றும் ஓசையும் நினைப்பை தடை செய்தாலும் நிம்மதியைத் தந்தது.
ஆலம் உகந்த பெருமாள் பிள்ளைக்கு இவனைப் பற்றித் தெரியாது. தான் கண்மூடுமுன்பே இவன் பி. ஏ. பாஸ் செய்துவிட்டான்; மேலும் செர்விஸ் கமிஷன் பரிட்சை என்ற திட்டம் அமுலுக்கு வருவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பே இவன் பாஸ் செய்துவிட்டான். தம்மை உத்யோக காலத்தில் ஆதரித்த டிவிஷனல் ஆபிஸர்கள் இப்பொழுது ஜில்லாக் கலெக்டர்களாக இருக்கிறார்கள். இவனைக் கொண்டுபோய் ரெவின்யு இலாகாவில் தள்ளிவிட்டால், மறுபடியும் இருபத்தியைந்து வருஷங்கள் வரை தம் குடும்பத்தின் ஜீவனோபாய பிரசினை தீர்ந்து போகும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். சுப்பிரமணி யனை அவர் ஒரு குட்டி தாசில்தாராக அந்த உத்தியோகத்துக்கு தனது பட்டத்து இளவரசனாக நினைத்தார். அவன் அப்படி நினைக்க வில்லை.
❍❍
"சுப்பையா?" என்றார் ஆலம் உகந்த பெருமாள் பிள்ளை.
"என்னப்பா?" என்றுகொண்டே கையிலிருந்த புஸ்தகத்தை விரலுக்கு இடையில் மடக்கிக்கொண்டு தான் உட்கார்ந்திருந்த அறையிலிருந்து வெளியே வந்தான் சுப்பிரமணியம்.
"அந்த கொடியிலிருக்கும் துண்டை எடு; நாளைக்கு நான் திருநெல்வேலிக்கு போறப்ப கூட வா; இப்போது புதுசா வந்திருக்கிற கலெக்டர் யார் தெரியுமா; மொதல் மொதல், ஐ. ஸி. எஸ். பாஸ் பண்ணிவிட்டு, டிவிஷனலாபீஸராக வந்தப்போ, எங்கிட்டத்தான் வேலை படிச்சான்; ரொம்பக் கெட்டிக்காரன்; நான் சொன்னால் கேட்பான்" என்றார் ஆலமுகந்த பெருமாள் பிள்ளை.
"எனக்கு உத்யோகம் சம்பாதிச்சுக் கொடுக்க, என்னைக் கூட்டிக் கொண்டு போவதாக உத்தேசமோ" என்று கொஞ்சம் மிடுக்காகக் கேட்டான் சுப்பிரமணியம்.
துண்டைக் கொண்டு முகத்தையும் கைகளையும் துடைத்துக் கொண்டே, "பின்ன என்ன மறுகால்மங்கலத்தில் மாடு மேய்க்கிற உத்தேசமோ" என்று கூறி உமிழ்ந்துவிட்டு மூக்காலும் வாயாலும் கேட்டார்.
"அவசியப்பட்டால் அதில் என்ன கேவலம்" என்றான் சுப்பையா.
புதுமைப்பித்தன் கதைகள்
749