உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாடுகளை விரட்டியடித்துக் கொண்டு செல்லுவதில் பரமமோகம் கொண்ட கருப்பையா இனிமேல் விட்டா வைப்பான். ஏக இரைச்சலுடன் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வண்டி சிட்டாகப் பறந்தது. எதிரே சரமாரியாக பார வண்டிகள்; சிந்தனைத் திறனை இழந்து கால வெள்ளத்தில் இழுபட்டுச் செல்லும் சநாதன தர்மம் மாதிரி பத்து முப்பது பார வண்டிகள் வேகத்துக்கு ஊறாக வழியை மறித்தன.

"வண்டியெ ஒதுக்கி அடியும்" என்ற கூப்பாடு போட்டுக்கொண்டு, வண்டியை வலது ஓரமாக, பாதி ரோட்டிலும், பாதி சரிவிலுமாக அடித்துக்கொண்டு முடுக்கினான் கருப்பையா.

எதிர்பாராத இயக்கம், பாரம்பரிய நியதியின் ஒழுக்கை குலைத்து சுழிப்புகளை உண்டுபண்ணுவதுபோல சாரையாகச் செல்லும் வண்டிகள் திக்காலுக்கு ஒருபுறமாக திரும்பித் தத்தளித்தன. கருப்பையா, சக்கரம் உராயாமல் லாவகமாக பாரவண்டிகளில் பாதியைக் கடந்து விட்டான்.

பின்புறம் எங்கோ மோட்டார் ஹார்ண் சப்தம் இடைவிடாமல் அலறியது. இன்னும் பன்மடங்கு குழப்பம் பார வண்டிச் சாரையில் ஏற்பட்டது. 'வண்டி'. 'பைதா', 'மாடு', 'சரட்டை இழு', 'வலமனை தளர்த்தாதே' என்ற பல குரல்கள்.

கருப்பையாவுக்கு முன்னிருந்த காளைகள் திடீரென்று மிரண்டன. வலது பக்கத்து கருப்பு வழியை மறித்துக்கொண்டு குறுக்கே நின்றது.

"அட அருதப்பயபிள்ளை' என்று ஏசிக்கொண்டே காளைகளின் சரட்டை இறுக்கிப் பிடித்தான் கருப்பையா. வண்டி திக்கென்று நின்றது. எங்கோ கேட்ட மோட்டார் சத்தம் திடுக்கிடும்படியாக பின்னால் கேட்டது. வேகமாக வந்த மோட்டார் நின்றது. பெட்ரோல் வண்டியிலிருந்து குதித்து ஓடிவந்த வெள்ளைக்காரச் சீமான், கையிலிருந்த கருங்காலித் தடியைக்கொண்டு மாடுகளை மாறி மாறி குறுக்கில் 'கூலிக் களுதே, கூலிக் களுதே' என்ற மந்திரத்தைச் சபித்துக்கொண்டு சாத்தினார்.

பின்புறம் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியத்துக்கு பழியான கோபம் வந்துவிட்டது. 'யாரடா மாட்டையடிக்கிறது' என்று இங்கிலீஷில் கேட்டுக்கொண்டு வண்டியை விட்டுக் குதித்து முன்பக்கமாக ஓடினான்.

துரைமகன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. செக்கச் சிவந்த முகம் துடிதுடிக்க, 'கூலிக் களுதெ' என்று மறுபடியும் கத்தினான்.

"யாரடா கூலி; குடியோ ஆள் தெரியவில்லை போலிருக்கு; என்னடே கருப்பையா, இவன் அலகிலெ ரெண்டு குடு" என்றான் சுப்பிரமணியம்.

லடாய் எங்கு துப்பாக்கி விவகாரத்தில் வந்து முடிந்துவிடுமோ என்று பயந்த ஆலமுகந்த பெருமாள் பிள்ளை, 'ஷெப்பர்ட் இடிய மாடிக் கிராமர்' இம்மியளவு வழுவாமல், 'நாட் ஒன்லி, பட

754

அன்னை இட்ட தீ