யிடம் அவர் கற்றது சைவ சித்தாந்தம் அல்ல; நாவுக்கு ருசியாக வெந்தயக் குழம்பும் காணத் துவையலும் எப்படிச் செய்துகொள்வது என்பதுதான். இவ்விருவரும் ஒருமுறை திருநெல்வேலி ஆனித் திருநாளுக்கு வந்திருந்தபோது, ரத வீதியில் தற்செயலாக திருவிழாப் பார்க்க வந்திருந்த இவரது குடும்பம் இவரை அடையாளங் கண்டு கொண்டு விட்டது. நடுத்தெருவில் ஆண்டியை வழிமறித்து வீட்டுக்கு இழுத்துப் போவது என்பது எந்தப் பத்தினிக்கும் ஏலாத காரியம் என தீர்மானித்து ஸ்ரீமதி அசைந்தாடும் பெருமாள், தன்னுடன் வந்த மூன்று பெண் குழந்தைகளுடன், உலகைத் துறந்து ஊரூராகச் சுற்றித் திரியும் இருவரையும் தொடர்ந்தாள். சிதம்பரச் சாமியும் அசைந்தாடும் பெருமாள் பிள்ளையும் அங்கிங்கெனாதபடி நேராக குறுக்குத் துறைக்குச் செல்ல, பத்தினியின் விருப்பமும் எளிதில் நிறைவேறியது. மண்டபத்திலமர்ந்த அசைந்தாடும் பெருமாள் பிள்ளையிடம் அப்பா எனக் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்க தாயார் ஏற்பாடு செய்தாள். பிரிந்தவர் கூடிய பின் நடப்பது எது என்பது பற்றி பேசவும் வேண்டுமா. யாவரும் எதிர்பார்த்தது போல சிதம்பரச் சாமிக்கும் காவித்துணிக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, நெடுங்காலமாக தான் விட்டுப் பிரிந்த சித்திரையம்மாள் என்ற தமது பத்தினியைத் தொடர்ந்து இல்லறம் புகுந்தார். தான் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டதினால் கூரையிற்று விழவில்லை; போகும்போது கொடியில் தாம் விட்டுப்போன கோவணம் போட்ட இடத்திலேயே கிடக்கிறது என்பதாதிய நுண் விஷயங்களைக் கண்டு மனைவியின் செட்டுக்கும் குடித்தனத்துக்கும் மானஸீகமாக வாழ்த்தினார்.
பிரிந்தவர் கூடி இல்லறம் நடத்தும் போதுதான், வாழ்வில் பெரும் பகுதி வியர்த்தமாகக் கழிந்து விட்டதினால் இனிமேலாவது செல்வத்தை சீக்கிரம் திரட்டிக் குவிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளை அவருடைய இயல்புக்கு பொருந்திய வகையில் செய்துவந்தார்.
இந்தச் சமயம் பார்த்துத்தான், பணம் திரட்டுவதற்கு குறுக்கு வழி தெரிந்த உப்புக் குறவன் வந்தான். ஒருநாள் சாயங்காலம், ரேகை மறையும் நேரம், அசைந்தாடும் பெருமாள் பிள்ளை அனுட்டானாதிகளை முடித்துக்கொண்டு வருவதற்காக நயினார்குளம் நோக்கிக் கொண்டிருந்தார்.
வந்து நின்றவன், வெகுநாள் பழகியவன் போல, "சாமீ" என்றழைத்தான்.
தம்மை, முந்திய ஆசிரமத்தில் சந்தித்தவனோ என்று நினைத்துக் கொண்டு, 'யாரடா' என்று கூர்ந்து கவனித்தார். கிருதாவும் மீசையும் முண்டாசும் பாசிமணியும் திகழ்ந்த உருவத்தில் தமக்குப் பரிச்சயமான விசேஷ அடையாளம் எதுவும் தெரியவில்லை.
என்னமோ ஏதோ என யோசிக்கும் சமயத்தில், "சாமீ ஒரு ரகசியம்" என்றான்.
"என்னடா ரகசியம்." என்றார் பிள்ளை.
புதுமைப்பித்தன் கதைகள்
765