உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பொழுதே அம்மையாருக்குப் பகீர் என்றது. கையில் உறை மருந்து போல இருந்த சொற்ப ஆதாயமும், பலமுமாக நின்ற நகை போனதில் அந்த அம்மையார் பட்ட அவஸ்தை சொல்லமுடியாது.

"இப்படியும் ஏமாறுவாகளா ஒரு ஆம்பளை" என்பதுதான் அவளது புலப்பம்.

இம்மாதிரியான விபரீத நிலையில் தான் கர்ப்பிணியானது அந்த அம்மாளுக்கு மகா மானக்கேடாக இருந்தது.

வருஷங்கள் பல கடந்து நிகழ்ந்த கர்ப்பமாகையால், தான் மாண்டு போவது நிச்சயம் எனவும் நினைக்க ஆரம்பித்தாள். "இந்தக் கூத்தை நினைக்கும்போது நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப் போகலாமா என்றிருக்கிறது; கட்டாயம், சாகாமல் போனால் தற்கொலையாவது செய்து கொள்ளுவேன்; அதற்குமுன் என்னுடைய பெண்களுக்கு கலியாணம் செய்து வைத்துப் பார்த்துவிட்டு சாக வேண்டும்" என்று அசைந்தாடும் பெருமாள் பிள்ளையை இடைவிடாமல் நச்சரித்தாள். நச்சுப் பொறுக்க முடியாமலும், கலியாணம் செய்து வைப்பது தம் கடமை என்று தமக்கு உள்ளூர ஏற்பட்ட பொறுப்பு உணர்ச்சியினாலும் வரன் தேடி அலைந்தார்.

இந்த விஷயத்தில் பிள்ளையவர்களுக்கு தெய்வ சகாயம் இருந்தது என்று சொல்ல வேண்டும். மூன்று பெண்களுக்கும் வெகு சீக்கிரத்தில் திருமணம் நடைபெற்றது. முதல் பெண்ணான பார்வதியை வட ஆற்காடு ஜில்லாவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உத்யோகம் பார்க்கும் வேலாயுதம் பிள்ளைக்கும், இரண்டாவது பெண் விசாலாட்சியை வேலாயுதம் பிள்ளையின் சகோதரரான சிதம்பரம் பிள்ளைக்கும் கலியாணம் செய்து வைத்தார். சிதம்பரம் பிள்ளை திருநெல்வேலி டவுணில், கீழப்புதுத்தெருவில் உள்ள தம் சொந்த வீட்டின் வாசலில் போர்டு தொங்கப் போட்டிருக்கும் பி.ஏ., பி.எல். இந்த வீடு தவிர, நயினார்குளத்துப் பற்றில் இரண்டு கோட்டை விதைப்பாடு உண்டு. வேலாயுதம் பிள்ளையின் பங்குக்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வசூல் செய்வது, அவரது பாகத்துக்குரிய வயல் விவகாரங்களைக் கவனிப்பது ஆகிய காரியங்களைச் செய்து வருவதுடன் கோர்ட்டுக்கும் இடையிடையே சென்று வந்தார்.

மூன்றாவது பெண்ணின் பெயர் சித்திரை. அவளுக்குத்தான் படித்த நகரவாசியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. மறுகால்மங்கலத்தில் அவளுக்கு முடிச்சுப் போட்டிருந்தது. வயிரவன் பிள்ளை குமாரன் பால்வண்ணம் பிள்ளை என்ற பிள்ளையாண்டான் அவளுக்குக் கணவனாக வாய்த்தான். இந்தத் திருமணத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே [வயிரவன் பிள்ளை] காலமாகி விட்டதினால், பால் வண்ணம் விதவை வளர்த்த பிள்ளையாக சர்வாதிகாரிகளின் சகல குணங்களையும் பெற்று, நாலாவது வகுப்பு வரை இங்கிலீஷ் படிப்பும் பெற்று, தாயார்மீது தனியரசு செலுத்தினான். இவர்களது வளைவு விசையாநல்லூர் ஆச்சியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஊரின் கீழ்க்கோடி-

768

அன்னை இட்ட தீ