உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.

விமரிசகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.

23.12.43

புதுமைப்பித்தன்

('காஞ்சனை' முன்னுரை)


ஒரு சமயம், பெர்னார்டு ஷாவிடம் நீங்கள் எழுதிய 'அந்த' ஏன் 'அப்படி' இருக்கிறது என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதில் சொன்னாராம்: பத்து வருஷத்துக்குள் ஒரு மனிதனுடைய உடம்பில் உள்ள ஜீவ அணுக்கள் யாவும் அடியோடு மறைந்து புதியவை அந்த ஸ்தானத்தை வகிப்பதால், பத்து வருஷங்களுக்கு முன் இருந்த அதே மனிதன் இப்பொழுது இருப்பதாகக் கொள்ள முடியாது. அந்தப் புஸ்தகம் எழுதிய பெர்னார்டு ஷா பத்து வருஷங்களுக்கு முன்பே மறைந்துவிட்டான். இப்பொழுது உங்கள் முன்பாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் ஆசான் வேறு. இவன் 'அவன்' எழுதியதற்கு ஜவாப்தாரி அல்ல - என்று தமது கருத்து வளர்ச்சியை (மாறுதலை), குறிப்பிட்டுக் கேட்பவர் வாயை அடைத்தாராம். அதே மாதிரி ஷாவின் சமத்காரத்தைப் பின்பற்றி இந்தக் கதைகளுக்கு வக்காலத்து வாங்கிச் சமாதானம் சொல்லும் நோக்கம் எனக்குக் கிடையாது. தவளைக் குஞ்சு ஆரம்பத்தில் மீனைப்போல் இருந்தாலும் தவளையின் தன்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே மாதிரி இக்கதைகளும், 'இத்தவளையின்' தன்மைகளை மறைமுகமாகக் கொண்டிருப்பதனால், இவற்றைப் பிரசுரத்திற்கு லாயக்கானவை என்று கருதி வெளியிட்டிருக்கிறேன். இக்கதைகள் யாவும் நான் எழுத ஆரம்பித்துச் சுமார் ஆறு மாதங்களுக்குள் அமைந்த மனநிலையைக் காட்டுவனவாகும். இவற்றில் பெரும்பான்மையாக எனது மனநிலையே சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வரும் கதாபாத்திரங்கள் போல நான் எனது கருத்துகளுக்குப் பொருந்தியவையாக பிடித்துவைத்த களிமண் பொம்மைகள். அவற்றிற்கு இருக்கும் உயிரும் வேகமும் என் ஆத்திரத்தின் அறிகுறி. அவை மனித ரூபம் பெற்றவையே ஒழிய, மனிதப் பண்பும் இயல்பும் உடைய சிருஷ்டிகள் அல்ல. பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப் பிண்டமாக வாழ்ந்த ஒரு வாலிபன், திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்துவரும் கொடுமைகளையும்

780

பின்னிணைப்புகள்