உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநீதிகளையும், சமூகத்தின் வக்கர விசித்திரங்களையும் கண்டு, ஆவேசமாக, கண்டதைத் தனது மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க் கனவுகளாகும். எனது கதைகளின், அதாவது. பூர்வ கதைகளின் கரு அதுதான். அவற்றில், கதைக்கு உரிய கதைப் பின்னல் கிடையா. அவற்றிற்கு ஆரம்பம் முடிவு என்ற நிலைகளும் பெரும்பான்மையாகக் கிடையா. மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக்கொள்ளுவதானால் அவை கதைகள் ஆகும். இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து மேல்நாட்டில் கதைகள் பிரசுரமாவது சகஜம். அந்த முறையை முதல் முதலாகத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும்.

மணிக்கொடிப் பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடங்கொடுக்கும், உத்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது. அந்தப் பத்திரிகையை ஆரம்பித்த லக்ஷியவாதியான கே. ஸ்ரீனிவாசன் அவருடைய அந்தக் 'குற்றத்திற்காக' (?) பாஷைப் பிரஷ்டம் செய்யப்பட்டவர் போல, வேற்று மாகாணத்திலே வேற்று பாஷையிலே பத்திரிகைத் தொழில் நடத்தும் பாக்கியம் கிடைக்கப்பெற்று வாழ்ந்து வருகிறார். காலத்துக்கேற்றபடி உடுக்கடிக்கும் கோட்டான்களும், ஆவேசத்தோடு சீறுவது போல 'பம்மாத்து' செய்துகொண்டு இருக்கும் கிழட்டுப் புலிகளும், பாஷையையும் பாஷையின் வளர்ச்சியையும் பாழ்படுத்திக்கொண்டு இருக்கும்படி அனுமதித்து வரும் தமிழரின் பாஷா அபிமானத்தைக் கோவில் கட்டித்தான் கும்பிட் வேண்டும். அன்று மறுமலர்ச்சி என்ற ஒரு வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண்டது. அதைச் சிலர் வரவேற்றார்கள்; பலர் கேலி செய்தார்கள்; பெரும்பான்மையோர் அதைப் பற்றி அறியாதிருந்தார்கள். மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிப்பல் குப்பைத் தொட்டியில் ஏறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக்கிடந்த அந்தக் குழந்தையை எடுத்துவந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி. எஸ். ராமையா என்ற நண்பரும், எங்களைப் போலவே உத்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில சகா எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம்."அது இரண்டு முன்று வருஷங்களில் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம்." அவர் அவளை ஒருவருக்கு விற்றார். விற்ற உடனே அவளுக்கு ஜீவன்முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை. இதுதான் தமிழிலே புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதையின் ஒரு அம்சம் எனது கதைகள்.

மணிக்கொடி பத்திரிகையில் எழுதியவர்களில் பெரும் கேலிக்கும், நூதனம் என்பதனால் ஏற்படும் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான். சரஸ்வதி பத்திரிகை ஆசிரியர் என்ற தலைப்பில் நையாண்டி செய்யப்பட்ட கௌரவம் எனக்கு ஒருவனுக்குத்தான் கிடைத்தது. கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு

புதுமைப்பித்தன் கதைகள்

781