உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால், பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது பொது ஜனங்களுக்குப் 'புரியாது' என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா, கருத்து ஓட்டத்திற்கு வசதி செய்வதா என்பதை அதே முறையில் பலர் எழுதிய பின்புதான் முடிவுகட்ட முடியும். அந்த முறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம் அது சௌகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன். இன்று திரும்பிப் பார்க்கும்போது அவை உலக வளர்ச்சியில் பரிணாம வாதத்தினர் சொல்வது போல இலக்கிய வளர்ச்சியின் தெருவடச்சான் சந்துகளாக அங்கேயே வளர்ச்சித் தன்மை மாறி நின்றுவிட்டன. இன்று அவற்றை ஆற அமரப் படித்துப் பார்த்துத்தான் முடிவுகட்ட வேண்டும். எனது முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். அதனால் முறை தப்பானது என்று முடிவுகட்டிவிடக் கூடாது. நான் அறியாமல் வகுத்துக்கொண்ட எனது பாதையைப் பற்றி இன்னும் ஒரு வார்த்தை. நான் எந்தச் சமயத்தில் இந்தத் தவளைப் பாய்ச்சல் நடையைப் பின்பற்றினேனோ அதே சமயத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாகக் கருதப்பட்டது என்பதைச் சமீபத்தில் நான் ஒரு இலக்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டு அறிந்தேன். இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை என்று கட்சி பேச நான் இந்தக் கருத்தை சொல்ல வரவில்லை. கருத்துக்கள் நமது தேசத்து மன உளைச்சல்களின் உருவகமாக இருந்தாலும் என் போக்கு உலக இலக்கியத்தின் பொதுப் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதை எடுத்துக் காட்டவே இதைக் குறிப்பிட்டேன். இனிமேல் படித்துப் பாருங்கள்.

29.8.47

புதுமைப்பித்தன்


('ஆண்மை' முன்னுரை)




ரா. ஸ்ரீ. தேசிகன் முன்னுரை

லக்கியம் ஓர் அகண்ட நந்தவனம். அதில் ஒவ்வொரு சமயத்தில் ஒரு ஜாதி மலர் விசேஷமாய்க் காணப்படுகிறது. இடையிடையே பெரிய காவியங்கள் மலர்கின்றன, நாடகங்கள் பூத்துச் சொரிகின்றன, உள்ளக் கிளர்ச்சிகளை உணர்த்தும் அகத்துறைப் பாக்கள் பூக்கின்றன, நாவல்கள் காட்டுப் பூக்கள் போலக் கொள்ளை கொள்ளையாக விரிகின்றன.

இவைகளெல்லாம் ஏக காலத்திலும் பூக்கலாம். இவைகளில் நாவல்

782

பின்னிணைப்புகள்