உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வனத்திலே திரிய அவகாசமில்லாதபொழுது சிறுகதை மலர்களின் மணத்தை நுகர்ந்து உலகக் கவலையை மறந்து ஜனங்கள் இன்புறுகிறார்கள்.

ஜனங்கள் சிறுகதை மலர்களின் மணத்தை அதிகமாய் விரும்பவே, இலக்கிய நந்தவனத்தில் அந்தப் பூச்செடிகள் அதிகமாய்ப் பயிரிடப்பட்டன. அவைகளைப் பயிரிட்டுப் பாதுகாப்பது மிகவும் சிரமம். எனினும் நம் தேசத்திலும், முக்கியமாகத் தமிழ் நாட்டிலும் ஏராளமான கதைகள் மலர்ந்து பரிமளிக்கின்றன. கம்பனுக்குப் பின் ஒரு மகாகவியைக் காணோம். "தாயுமானவர் இல்லையா? இராமலிங்க சுவாமிகள் இல்லையா? பாரதியார் இல்லையா?" என்று சிலர் வினவலாம். கம்பனின் காம்பீரியக் கவிப் பிரவாகத்தைப் பார்த்த கண்களுக்கு இவர்களெல்லாம் அழகாய்ச் சலசலவென ஓடுகிற சிற்றோடைகள்தான். பெரிய காவியங்கள் தோன்றாதது போலவே சிறந்த நாடகங்களும் தோன்றவில்லை. உயர்ந்த நாவல்களும் இல்லை. ஆயினும் நம் நாட்டு மறுமலர்ச்சியில் சிறுகதை மணம் கமழ்கிறது. இது ஓர் அதிசயம்.

கதை மலர்களில் நம் நாட்டு வித்துக்களிலிருந்து வெடித்து வெளிக் கிளம்பினவைகள் எத்தனை? வெளிநாட்டு வித்துக்கள் நம் நாட்டு உரம் பெற்று வளர்ந்தனவா? அல்லது அந்நிய நாட்டு மலர்கள்தான் நம் நாட்டு மலர்கள் போலப் போலிச் சோபையைக் காட்டுகின்றனவா? உற்று நோக்கினால் கதை மலர்களில் இந்த மூன்று ரகங்களும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

அழகான கதைகள் மலர்வதென்றால் அதற்கு வளம் மிகுந்த ஒரு வளர்ப்புப் பண்ணை வேண்டும். அப்பண்ணையில் உருவிலா, மணமிலாப் பூக்கள் பல பூத்து, வாடி, மண்ணோடு மண்ணாக மக்கி எருவாகியிருக்கவேண்டும். இதில் ஆச்சரியமில்லை. முன் பூத்து வாடிய மலர்களே இப்பொழுதுள்ள கதைகளுக்கு உரமாகியிருக்கின்றன. நம்முடைய சாரமற்ற கதைகளே இனிப் பூக்கும் வாடாத மலர்களுக்கு எருவாகி விடுகின்றன.

தமிழ் இலக்கியத்தில் சமீப காலத்தில் அலர்ந்துள்ள கதை மலர்கள் பல. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் புஸ்தக ரூபத்தில் வரவில்லை. என் கைக்குக் கிடைத்த கதைகளில் அதிக அழகாய் அமைந்த சிலவற்றைக் கீழே குறிப்பிடுகிறேன்:

கொட்டுகிற மழையிலே, இருளை வெட்டுகிற மின்னலிலே, காற்று விம்மி விம்மி அடிக்க, முடிவில் உயிரை மாய்த்துக்கொண்ட ருக்மணியின் சோகத்தைத் தன் ஆயிர இலை வாய்களினால் ஓலமிட்ட 'குளத்தங்கரை அரசமரம்' மனத்தை விட்டு அகலுமோ? கடை, ரயில்வே ஸ்டேஷன், சினிமா முதலிய இடங்களில் சிந்தை தேக்கிய முகத்துடன் ராமநாதய்யர் தேடியும் காணாத 'தேவானை'யின் கஷ்டத்தைப் பற்றி வாசித்த எவர் உள்ளந்தான் உருகாது? "அருள் சுரந்தது; ஆனால் மார்பில் பால் சுரந் ததோ!" என்று பூர்த்தியாகிற ஒரு தாயின் கதை நம் உள்ளத்தைக் கவராமல் போகாது. முருகனும் கிருஷ்ணனும் இறுதியில் ஒருவருக் கொருவர் பார்த்துக் கண்ணீர்விட்ட காட்சியைத் தருகிற கலைஞன் தியாகம் நம் அகக் கண்முன் ஓடிவரும். "நீ வச்சுக்கக் கூடாதா அத்தெ?"

புதுமைப்பித்தன் கதைகள்

783