உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று குழந்தை கேட்க, ஒரு விதவையின் மனத்தில் துயின்றுகொண்டிருந்த ஆயிரம் உணர்ச்சிகள் குமுறி வருகிறதைச் சித்திரிக்கும் 'பூச்சூட்டல்', தொலையாத இருட்டில் புழுங்கிக் கலங்கும் குஞ்சம்மாவின் உள்ள உணர்ச்சிகளை நயம்படக் காட்டும் 'விடியுமா?', ராதாவின் மாமா சந்திரன் நினைவு அலைகளையெழுப்பும் 'ஞாபகம்', சுழித்தோடுகிற துங்கபத்திரா நதிக்கரையில் சின்னாபின்னமாய்க் கிடக்கும் சிற்பங்களை ராமராயனின் சிதைந்த காதல் மாளிகையெனக் கூறும் 'ராமராயன் கோயில்', கணவனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்யும் காமாட்சி அம்மாளின் தியாகத்தைக் காட்டும் 'பொன் வளையல்', ஜானகிராமய்யர் அம்புஜவல்லி இவர்கள் அகத்தில் அருவிபோல் ஓடுகிற அன்பைக் காட்டும் 'பெற்றோர்கள்', தனக்குத் தகுந்த கணவன் வராது ஏங்கி வாடும் பார்வதியின் வேதனையைக் காண்பிக்கும் 'என்று வருவானோ?'—இக் கதைகள் என் அறிவு வட்டத்திற்குள் மிதந்து வருகின்றன. இவை தவிர வேறு பல அழகிய தமிழ்க் கதைகளும் இருக்கலாம். பல இளம் எழுத்தாளர்களின் கதைகள் அவ்வப்பொழுது பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இவையெல்லாம் தொகுக்கப் பெற்றுப் புத்தகங்களாக வெளிவந்தால் தான் எல்லோரும் இவற்றை நன்கு அநுபவிக்கவும், இவற்றின் வளத்தைப் பற்றி நிர்ணயிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கும். எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றனவோ அவ்விடத்தைக் கைகூப்பித் தொழ வேண்டும்; அதுதான் கோயில்.

நம் தமிழிலே நல்ல கதைகள் வருவதற்கு மூல காரணம் மேனாட்டாரின் அருமையான கதைகளை வாசித்ததுதான் என்று இலக்கிய உலகில் திரியும்போதெல்லாம் நாம் உணர்கிறோம்.

சிறுகதைக்கு உருக் கொடுத்தது, இலக்கணம் வகுத்தது முதலியன மேனாட்டார் செய்த வேலைகள். அவர்கள் வகுத்த இலக்கணத்திற்கிணங்க நம் நாட்டில் கதைகள் இல்லாமற் போகவில்லை. கலித்தொகை, புறநானூறு முதலிய சில நூல்களில் அநேக சந்தர்ப்பங்கள், நிகழ்ச்சிகள் சிறுகதைச் சுருதியில் செல்லுகின்றன. ஏசுநாதர் உபதேசக் கதைகள் போலவே உபநிஷத்துக்களில் காணப்படும் கதைகளை வாசிக்குந்தோறும் எத்தனை மொழிகடந்த பாவ கர்ப்பங்களாக அவைகள் இருக்கின்றன என்று நாம் ஆச்சரியத்தை அடைகின்றோம்.

ஆனால், பெரும்பாலும் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் போலவே நீதிகளைக் கற்பிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. கதைகளில் நீதிகள் வரக்கூடாது என்பதில்லை; ஆனால், வெறும் நீதிகளுக்காகவோ, வேறு குறிப்பிட்ட நோக்கங்களுக்காகவோ கதைகள் கட்டப்பட்டால் அவை இலக்கியக் கலையின் உயர்ந்த பீடத்திலிருந்து இறங்கிவிடுகின்றன. இக்கதைகளில் கலை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாகவே கொள்ளப்படும். ஒரு சங்கீதம் போல, ஒரு நாட்டியம் போல, ஓர் ஓவியம் போலக் கதைகளையும் அநுபவிக்க வேண்டும் என்று மேனாட்டார் காண்பித்தனர். கதையின் மர்மங்களும், இலக்கணங்களும், இரகசியங்களும் தெரிந்தால்தான் அந்தத் துறையில் நாம் பயமின்றி இறங்கலாகும்.

784

பின்னிணைப்புகள்