டாக்டர் தாகூர் எழுதிய முடிவும், "எனக்கு வாய்விட்டு அழுவதற்குக் கூடவா இப்பரந்த உலகில் இடமில்லை?" என்று காதரின் மான்ஸ்பீல்டு கொடுத்த முடிவும் என் மனத்தில் மின்னிக்கொண்டேயிருக்கின்றன.
சிறு கதைக்கு விஷயங்கள் எவை? உலக நாடக மேடையில் நடக்கிற சம்பவங்கள் முழுவதுந்தான். ஒரு கை ஜாடை, ஒரு கண் சிமிட்டல், ஒரு நடை வீச்சு, தியாகம், வீரம், காதல் — எல்லா அநுபவங்களும், எல்லா ரஸங்களுமே கதையின் எல்லைக்கு உட்பட்ட விஷயங்களாகும். சுருங்கச் சொல்லுமிடத்து அனந்தமான தந்திகள் அடங்கிய வாழ்க்கை வீணையில் ஒரு தந்தியைப் பேசவைப்பதுதான் சிறு கதை. என்ன, கதைக்கு லட்சணம் கூறப் புகுந்து கவிதையின் லட்சணமல்லவா கூறப்படுகிறது என்று சிலர் கருதலாம்.
ஆம், கதைக்கும் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. சிறு கதைச் சைத்திரிகளைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தால் அவன் ஒரு கவி என்பது புலனாகும். கவியுள்ளம் படைத்தவன்தான் சரியான கதை எழுத முடியும். அகத்துறைக்கான[1] ஒரு நிலையை (lyric) அடைந்துவிடுகிறது உண்மையான சிறு கதை. அகத்துறைப் பாவைப் போலவே சிறு கதையிலும், தெளிவாக, உணர்ச்சி பொங்க வருணிக்கப்படும் ஓர் அநுபவத்தை மாற்றக்கூடிய அல்லது குழப்பக்கூடிய வேறு எந்த அம்சமும் இருக்க இடமில்லை.
புகழ்பெற்ற பிரெஞ்சுக் கதாசிரியரான மாபஸானின் கதைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் ஒரு விஷயம் இங்கு கவனிக்கத்தக்கது: அகத் துறைக்கான வடிவை அடையவேண்டுமென்று மாபஸான் கதைகளை எழுதவில்லை. கதைகளுக்கு வேண்டிய பாகங்களை வைத்துக்கொண்டு மற்றப் பாகங்களை நிர்த்தாட்சண்யமாக அவர் கழித்துவிட்டபடியால் அவர் கதைகள் அந்நிலையை அடைந்துவிட்டன. இவ்வாறு அடையாவிட்டால் உயர்ந்த லட்சியத்திலிருந்து கதைகள் இறங்கிவிட்டன என்றே சொல்லிவிடலாம்.
காதலும், கடிதமும், கண்ணீரும் சிதறிக் கிடக்கிற எத்தனையோ கதைகளை வாசித்துச் சலித்துப் போயிற்று என் உள்ளம். காதல் மனித வாழ்க்கையில் ஒரு மூலை, ஒரு கோணம். மூலை முழு வீடாகுமா? மேலும், தீண்டாமை, கதர், கோயில் திறப்பு, சமுதாய அக்கிரமங்கள், ஜாதிக் கட்டுப்பாடுகள், விதவையின் துயரம் இவைகளுக்குத்தான் கதைகள் எழுந்தனவா?—அல்லது கதைகளுக்காகத்தான் இவைகள் உண்டாயினவா?
சமூகக் கதைகளில் உருக்கமில்லாமல் போகவில்லை. நம் நாட்டு நிலைக்கு அவைகளும் வேண்டியவைதான். ஆனால் சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டால், பிறகு அவைகள் ரஸமற்றுச் சப்பென்று போய் விடும். நிரந்தரமாக எக்காலத்திலும் நம் உள்ளத்தை அவைகள் தொட்டுக் கொண்டிருக்க முடியாது.
- ↑ அகத்துறையென்பது காதலை மட்டும் குறிப்பதாக இங்கு கொள்ளப்பட வில்லை. உள்ளத்தின் உணர்ச்சிகள் அனைத்தையும் அது தழுவும்.
786
பின்னிணைப்புகள்