பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 1943ல் ‘தினமணி’ ஆசிரியருக்கும் அதன் நிர்வாகஸ்தர்களுக்குமிடையே ஒரு போராட்டம் எழுந்தது. அதன் காரணமாக ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் தன் பதவியை ராஜிநாமா செய்தார். ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பலரும் அவருடன் வெளியேறினர். அவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர்.

டி.எஸ். சொக்கலிங்கம் 1944 ஆரம்பத்தில் ‘தினசரி’ என்ற பெயரில் ஒரு நாளிதழ் தொடங்கினார். உரிமைப் போராட்டத்தின் விளைவாக வேலையைவிட்டு வெளியேறிய பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டுறவு முயற்சிபோல் ‘தினசரி’ அமைந்திருந்தது. எனவே, அந்தப் பத்திரிகையில் உழைப்பவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க அது முன்வந்தது.

‘தினசரி’யின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற புதுமைப்பித்தன் ‘தினமணி’யில் பெற்றுக்கொண்டிருந்த சம்பளத்தைவிட அதிகப்படியான, நியாயமான சம்பளம் பெறும் வாய்ப்பைப் பெற்றார். அது அவருடைய வாழ்க்கைத் தேவைக்குப் போதுமானதாக இருந்தது.

இருப்பினும், அவருக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை. ‘தினசரி’ வேலை அவர் மனசுக்குப் பிடித்ததாக இருக்கவில்லை. இப்படி நாள் தோறும் உழைத்துத் தான் என்ன பிரயோசனம் என்பது போன்ற விரக்தி உணர்வு அவருள் வளரலாயிற்று. பத்திரிகைத் துறையில் பத்து வருடங்களுக்கு அதிகமாக அவர் உழைத்திருந்தார். பணம் எதுவும் மிச்சப்படவில்லை. சினிமாத்துறையில் ஈடுபட்டால் பணம் தாராளமாகக் கிடைக்க வழி ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருந்தது.

புதுமைப்பித்தனோடு எழுத்துலகில் பாடுபட்ட அவருடைய நண்பர்கள் சிலர் சினிமாத்துறையில் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ‘மணிக்கொடி’ ஆசிரியராக இருந்த பி.எஸ். ராமையா வசனகர்த்தாவாகத் திரை உலகில் புகுந்தவர் சினிமா டைரக்டராக வளர்ந்திருந்தார். ‘மணிக்கொடி’யில் கதைகள் எழுதியவர், பிறகு ‘தினமணி’ ஆசிரியர் குழுவில் சேர்ந்து உழைத்தவர். இளங்கோவன் என்ற புனைபெயர் கொண்ட ம.க.தணிகாசலம். அவர் சினிமா வசனகர்த்தா ஆகிப் பெரும் புகழுடன் விளங்கினார். ‘மணிக் கொடி’ துணை ஆசிரியராக இருந்த கிரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி ஸ்டுடியோவின் கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டு இருந்தார்.

திறமையும் புகழும் பெற்றிருக்கும் நாமும் சினிமா உலகத்தில் ஈடுபட்டால் நன்கு பிரகாசிக்க முடியும் என்று புதுமைப்பித்தன் நினைத்திருக்கக்கூடும். அது மனித இயல்புக்கும் கால நியதிக்கும் ஏற்புடையதே ஆகும்.