பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 அவரோ மற்றவர்களோ சந்தேகிக்கவில்லை. இயல்பாகவே அவருக்கு பலவீனமான உடல். வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்பட்ட சிரமங்களும், சோதனைகளும், வறுமையும் ஏமாற்றங்களும் அவருடைய உள்ளத்தையும் உடலையும் வெகுவாகப் பாதித்திருந்தன. புனா போய்ச் சேர்ந்தபோது அவரது உடல்நிலை மோசமாகி விட்டது.

புனா நகரில் அவருக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை; சரியான கவனிப்பும் இல்லை. அங்கே அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இதனால் எல்லாம் அவரது உடலினுள் உறைந்திருந்த கொடிய நோய் முற்றி வளர்ந்து அவரை உருக்குலைத்தது. தான் இனி அதிக நாள் வாழப்போவதில்லை என்பதை அவர் உணர முடிந்தது. எனினும், ஏற்றுக் கொண்ட வேலையை ‘ராஜமுக்தி’ படத்துக்கான வசனத்தை எழுதி முடிக்க வேண்டுமே என்று உழைத்தார். அப்படி முடிப்பதற்குள் நோய் அவரைப் பூரணமாகக் கவ்விக் கொண்டது. உடல்நிலை மிக மோசமாகிப் போனதால் அவர் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

1948 மே முதல் வாரம் புதுமைப்பித்தன் புனாவிலிருந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கேதான் அவருடைய மனைவியும், மகளும் இருந்தார்கள். மற்றும் உறவினர்களும் இருந்தனர். இலக்கியவாதிகளின் நண்பரான எஸ். சிதம்பரமும் உடன் இருந்தார்.

திருவனந்தபுரத்தில் வைர வியாபாரம் செய்து கொண்டிருந்த பெரும் செல்வர் ஒருவரின் செல்லப்பிள்ளை எஸ். சிதம்பரம். 1940களில் அவருக்கு இலக்கியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. திடீர் மோகம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். எழுத்தாளனாகப் பெயரெடுத்துப் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அவர் கவிதைகள் எழுதினார்.‘கவிக்குயில்’ என்ற பெயரில் இலக்கிய மலர்கள் தயாரித்தார். அம் மலர்களில் புதுமைப்பித்தனின் கவிதைகள் பிரசுரமாகியிருந்தன. சில வருடங்களிலேயே சிதம்பரத்தின் இலக்கிய மோகம் தணிந்து ஒய்ந்துவிட்டது. அவர் புகைப்படக் கலை, சினிமாக் கலை போன்ற வேறு துறைகளில் ஆர்வம் காட்டலானார்.

மறுமலர்ச்சி இலக்கியத்தில் எஸ். சிதம்பரம் ஆர்வம்கொண்டிருந்த காலத்திலேதான் புதுமைப்பித்தன் காச நோயாளியாகத் திருவனந்தபுரம் சேர்ந்திருந்தார். புதுமைப்பித்தனிடம் பெரும் மதிப்பு கொண்டிருந்த சிதம்பரம் இறுதிக் காலத்தில் அவருடனிருந்து அவருக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பேறு பெற்றார். புதுமைப்பித்தனுக்கு பயங்கரமான பணத் தேவை. நோய்க்கு சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கு அதிகம் பணம்