பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 நண்பர்களுக்கு எழுதவேண்டிய நிலைமைக்கு ஆளானார். இது மிகுந்த வேதனைக்கு உரிய விஷயம். வாழ்க்கையின் சோகநிலையை உணர்த்தும் உண்மை.

சாகும் நிலையில் படுக்கையில் கிடந்த புதுமைப்பித்தன் சிதம்பரத்திடம் ஒரு நாள் தெரிவித்தது இது ‘இலக்கிய ஆசை உனக்கு உண்டு. உன் முழுநேர உழைப்பையும் அதற்காகச் செலவழித்து விடாதே. இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. இது உன்னைக் கொன்று விடும். இலக்கியம் வறுமையைத் தான் கொடுக்கும்.’

நவயுகப் பிரசுராலயம் முதன் முதலாக வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்ற தொகுப்புக்குப் பேராசிரியர் ராபூர். தேசிகன் அருமையான முன்னுரை ஒன்று எழுதியிருந்தார். ‘வாழ்க்கை முள்ளில் சிக்கி ரத்தம் சிந்தும் ஒரு சோக இதயத்தின் குரல்களை இக்கதைகளில் கேட்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதுமைப்பித்தனின் கதைகள் அப்படி என்றால், ‘வாழ்க்கை முள்ளில் சிக்கி ரத்தம் சிந்திய சோக இதயத்தின்’ அனுபவ பூர்வமான இறுதி எச்சரிக்கையாகவே கொள்ளவேண்டும், அவர் நண்பர் சிதம்பரத்துக்குச் சொன்ன அறிவுரையை.

தாராளமான நிதி உதவிகள்கூட அந்த இலக்கிய பிரம்மாவின் நிலைமையை மாற்றி அமைத்திருக்க இயலாதுதான். அவரே அதை உணர்ந்திருந்தார். சிதம்பரத்திடம் அவர் தெரிவித்தார். ‘நான் இப்போ எனக்கு வரப்போகிற மணியார்டரைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். புரியவில்லையா? சாவைத் தானப்பா நான் மணியார்டரை எதிர்பார்ப்பதுபோல எதிர்பார்த்திருக்கேன்.’

அந்த ‘மணியார்டர்’ அவருக்கு வந்தது.

1948 ஜூன் 30-ஆம் நாள் இரவு புதுமைப்பித்தன் மரணம் அடைந்தார்.