பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘சாம்பல் காற்றோடு போச்சு பெயர் பெயரோடு போச்சு. மனித மனம் இம்மாதிரி அனந்தகோடி கூடுகளைக் கட்டிக்கட்டி விளையாடியது. கைலாசபுரத்து மருதமரம் நிழல் கொடுத்தது. மரம் பூத்துக் காய்த்தது. பழுத்தது. ஆற்றில் தண்ணிர். தண்ணிர் மணலிலும் படியிலும் தவழ்ந்து ஒடியது. கள்ளிப்பட்டியானால் என்ன, கைலாச புரமானால் என்ன?-காலவெள்ளம் தேக்கற்று ஒடிக்கொண்டே இருந்தது. அதிலே வரையில்லை. வரம்பில்லை. கோடுகூடித் தெரியவில்லை. கருவூரிலானாலென்ன? காட்டுரிலானாலென்ன? சமாதியோபிரக்ஞையோ? எதுவானாவென்ன?

‘நான் ஒடினால் காலம் ஒடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஒடுகிறதா? ஞாயிறு-திங்கள்-செவ்வாய்-நான் இருக்கும் வரை தான் காலமும், அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு பரமசிவம் பிள்ளை எங்கே?’

சிந்தனை ஆழம் நிறைந்த கதை. படிப்பவர்களின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் எழுத்து. அநேகமாக இது தான் புதுமைப் பித்தனின் கடைசிக் கதை என்று கருதப்பட வேண்டும்.

‘என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி’ என்று கூறினார் புதுமைப்பித்தன. நம்பிக்கை வறட்சியையே அழுத்தமாகப் பதிவு செய்யும் கதைகள் சிலவற்றை அவர் சிருஷ்டித்திருக்கிறார். அவற்றில் ‘மகா மசானம்’ முக்கியமானது.

நாகரிகம் பெருக்கெடுத்தோடும் முக்கியப் பெருவீதியின் ஒரு ஒரத்தில் அநாதையாகக் கிடந்து செத்துக் கொண்டிருக்கிற ஒரு கிழப் பிச்சைக்காரனின் கடைசி நேரத்தை இக்கதை விவரிக்கிறது. அவனைப் பார்க்காமலும் பார்க்க விரும்பாமலும் அவரவர் காரியத்தின் மீது சென்று கொண்டிருக்கும் மனிதர்கள்! சாகிறவனுக்கு உதவி செய்ய வந்து, சிறிது காசு கிடைத்ததும் அதை எடுத்துக் கொண்டு ஒடிவிடும் இளம் பிச்சைக்காரன் வேடிக்கை பார்க்கிற சிறு பெண்; அச் சிறுமியின் அப்பா முதலியவர்களைக் கொண்ட ஒரு வாழ்க்கை நாடகம் அழகான சிறுகதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாகரிகப் பெரு நகரமே ‘மகாமசானம்’ போல் தோற்றம் கொள்கிறது, கதையைப் படிக்கையில்.

குடும்பத்தையும் பொறுப்புகளையும் விட்டு விட்டு சாமியாராகப் போகிற செண்பகராமன் பிள்ளை துறவுநிலையிலும் விரக்தி அடைந்து ஊருக்கே திரும்பிவருகிற செயலை-இருட்டோடு போனவர் இருளிலேயே திரும்பி வந்ததை-சித்திரிக்கும் ‘சித்தி’யும் நம்பிக்கை வறட்சியைக் காட்டுகிற கதை தான்.