பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதுமைப்பித்தன் அதேபோல ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வாழ்க்கையும் அவர் எழுதினார். 'கப்சிப் தர்பார் என்ற அந்த நூலின் முதல் பகுதி மட்டுமே அவரால் எழுதப்பட்டது. பிற்பகுதியை பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியுள்ள எழுத்தாளர் ந. ராமரத்னம் எழுதியுள்ளார். பாசிச சர்வாதிகாரிகளின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக எழுதியிருப்பதால், புதுமைப்பித்தனுக்கு அவர்கள் பேரில் வியப்பும், பாசிசத்தின் மீது அபிமானமும் இருந்திருக்கக்கூடுமோ என்று இக் காலத்தில் சிலர் சந்தேகிக்கிறார்கள். இது சரியல்ல. இரண்டாவது உலக மகா யுத்த காலத்திலும், அதை அடுத்த சில ஆண்டுகளிலும் உலகப் பிரமுகர்கள் பலரையும் பற்றி பத்திரிகைகள் விரிவாகவே எழுதிக் கொண்டிருந்தன. உலக அரங்கில் பெயர் பெற்று விளங்கிய அயல் நாடுகளின் தலைவர்கள், பெரிய மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆங்கிலத்தில் அதிக அதிகமாக வந்தன. வியாபார நோக்கில் தான். அந்தப் போக்கை ஒட்டி, தமிழிலும் வாணிப நோக்கில், பத்திரிகைகளும் புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் அவை போன்ற வரலாறுகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டின. காலத்தை அனுசரித்து, அவர்களுக்காக, புதுமைப்பித்தனும் முசோலினி, ஹிட்லர் ஆகியோரது வரலாறுகளை எழுதினார். புதுமைப்பித்தன் நாவல் எதுவும் எழுதவில்லை. எழுத ஆரம்பித்த ஒன்றிரண்டு முயற்சிகளும் அபூர்ணமாகச் சில பக்கங்களோடு நின்று விட்டன. மாற்றாந்தாயின் அன்பில்லாப் போக்கினால் பாதிக்கப்படும் குழந்தைகளை வைத்து அவர் எழுதப் தொடங்கிய சிற்றன்னை இப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றேயாகும். பெரிய நாவல்கள் எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது உண்டு. அவற்றின் கதைக்கருபற்றி பேச்சோடு பேச்சாக நண்பர்களிடம் அவர் சொன்னதும் உண்டு., ஒரு நாவலுக்கு 'மூக்கபிள்ளை என்றுகூட அவர் பெயர் வைத்தார். ஆயினும் அவற்றில் எதையும் அவர் எழுதவில்லை. புதுமைப்பித்தன் எழுத்துக்களைப் படித்து ரசிக்கிறவர்கள், அவருடைய கதைகள்மூலம் அவரது உள்ளத்தை உணர்கிறவர்கள், அவர் எப்படி இருந்தார். எப்படிப் பழகினார் என்று அறிய விரும்புவது இயல்பேயாகும். - . -