பக்கம்:புது டயரி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

புது டயரி


ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, உதவியாகச் சிலர் இருந்தனர். அவருள் எம். ஏ. பட்டம் பெற்றவர் ஒருவர். ஒரு நாள் மகாவித்துவான் எதையோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, அந்த எம். ஏ. யைப் பார்த்து, “அழற்படுகாதை எடுத்துக் கொண்டு வா” என்றார். எம், ஏ. நூல் நிலையம் சென்றார். சென்றவர் நெடு நேரமாகியும் வரவில்லை. பிறகு வந்தார், “எங்கே புத்தகம்?” என்று கேட்டார் மகா வித்துவான். “அழற்படுகாதை என்ற புத்தகம் நூல் நிலையத்தில் இல்லை. நெடுகத் தேடிவிட்டேன்” என்றார், கேட்ட புலவர் பெருமானுக்குக் கோபம் வந்துவிட்டது. “அட முட்டாள்! சிலப்பதிகாரம் இங்கே இல்லையா?” என்று கத்தினார்.

பாவம் அந்த எம். ஏ. க்கு அழற்படுகாதை என்பது சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு காதை என்று தெரியவில்லை, அவருக்கே தெரிய வில்லையென்றால், புத்தகத்தை வாங்கி வைத்து வருகிறவர்களுக்குக் காட்டுவதோடு நிற்கும் பெரு மக்களுக்கு என்ன தெரியப் போகிறது?

நான் படித்துக் குறிப்பு எடுத்த புத்தகத்தை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வருகிறதில்லை. கேட்கிறவர்களுக்குக் கொடுக்காவிட்டால் அவர்கள் என்னைப் பற்றித் தவறாக நினைக்கக்கூடும். சிலருக்குப் புத்தகங்ளைக் கொடுத்துத் திரும்பி வராமல் இழந்திருக்கிறேன். அந்தப் புத்தகங்களைப்போல ஆயிரம் புத்தகங்கள் கடையில் வாங்கிக் கொள்ளலாம்; புத்தம் புதிய பதிப்பே கிடைக்கும். ஆனாலும் என் கைப்பட்ட என் சொந்தப் புத்தகத்தில் குறித்திருக்கும் அடையாளங்களை, செய்திருக்கும் திருத்தங்களை, குறித்திருக்கும் சிறு குறிப்புக்களை, நான் விலை கொடுத்து எங்கே வாங்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/125&oldid=1152393" இலிருந்து மீள்விக்கப்பட்டது