பக்கம்:புது டயரி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

புது டயரி

 மாலையில் வந்து எழுதலாம்’ என்று டயரியை மூடி வைத்து விட்டுக் குளிக்கப் போனேன்.

உணவு உண்டு அலுவலகம் போனேன். அங்கே சில நண்பர்கள் பார்க்க வந்தார்கள். “நான் முதல்முதலாக இந்தக் கதையை எழுதினேன். இதை எங்கே கொடுக்கலாம் என்று எண்ணியபோது உங்கள் ஞாபகம் வந்தது. என் முதல் படைப்பைக் கலைமகளுக்கு நிவேதனமாக்குகிறேன்” என்று ஒருவர் தாம் எழுதிய கதையைக் கொடுத்துவிட்டுச் சொன்னார். தலைச்சன் பிள்ளையை மடத்துக்குக் கொடுப்பதுபோலவும், முதலில் பழுத்த பழத்தைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது போலவும் அவர் நினைத்துக்கொண்டார் போலும்! நினைத்துக்கொள்வதாவது அவர் இதற்கு முன்பு எந்த எந்தப் பத்திரிகைக்கெல்லாம் போய் அலைந்தாரோ, யாருக்குத் தெரியும்? அதையெல்லாம் சொல்வாரா? முதல் முதலாக எழுதும் கதையும் முதல் முதலாகப் பிறக்கும் பிள்ளையும் ஒன்றாகுமா? இது வெறும் வெள்ளோட்டம்.

இப்படி வேறு பலர் வந்தார்கள். பல கடிதங்கள் வந்திருந்தன. எல்லாவற்றிற்கும் பதில் எழுதினேன். “முருகப் பெருமானுடைய எந்தப் புறத்தில் வள்ளிநாயகி இருக்கிறாள்?” என்று ஒருவர் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் எழுதினேன். வேலைகளைக் கவனித்தேன். வந்திருந்த கதைகளையும் கட்டுரைகளையும் படித்தேன்.

மாலையில் வீட்டுக்குப்போனேன். சிற்றுண்டி உண்டு விட்டு டயரியின்முன் அமர்ந்தேன். இரண்டாந் தேதியின் கீழே எழுதத் தொடங்கினேன். அலுவலகத்தில் கவனித்த வேலைகளை எழுதினேன். வந்தவர்களைப் பற்றி எழுதினேன். வந்த கடிதங்களையும் எழுதிய பதில்களையும் எழுதலாமா என்று யோசித்தேன். சில பேருக்குத் திருமண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/13&oldid=1149390" இலிருந்து மீள்விக்கப்பட்டது