பக்கம்:புது டயரி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது டயரி

7

 வாழ்த்துக்களை அனுப்பினேன். சில கூட்டங்களுக்கு, ‘நன்கு நிறைவேறுக’ என்று எழுதினேன். ஒருவர் இறந்த செய்தி தெரிந்து உரியவருக்கு அநுதாபக் கடிதம் அனுப்பினேன். இவற்றை எல்லாம் போய் எழுதிக் கொண்டிருக்க லாமா? முக்கியமான கடிதங்களையும் பதிலையும் எழுதினால் போதும் என்று தீர்மானித்தேன். அப்படியே சிலவற்றை எழுதினேன்.

பிறகு வீட்டு விலாசத்துக்கு வந்திருந்த கடிதங்களைப் பார்த்தேன்; பதில் எழுதிப் போட்டேன். அவற்றிலும் முக்கியமானவற்றைப் பற்றி டயரியில் எழுதினேன். இன்று முக்கால் பக்கத்துக்கு மேலே எழுதிவிட்டேன். ஆகவே அதிகத் திருப்தி, உடனே மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.

3 -ஆம் தேதி, அலுவலகத்திலிருந்து வந்ததும் சோர்வாக இருந்தது. அதோடு சொல்லி வைத்தாற்போல இரண்டே நண்பர்கள் அலுவலகத்தில் பார்க்க வந்தார்கள். அதிகக் கடிதங்களும் இல்லை. ஆகையால், இராத்திரி எழுதிக் கொண்டால் போகிறது என்று எண்ணி வெளியிலே உலாவப் போய்விட்டேன்.

இரவு உணவுண்டு விட்டுப் படுக்கையை விரித்து அதில் உட்கார்ந்தபடியே டயரியை எடுத்து வைத்துக் கொண்டு, வந்த இரண்டு பேர்களைப் பற்றி எழுதினேன். கடிதங்களில் ஏதும் முக்கியமில்லை. மூன்று வரிகள் கூட நிரம்பவில்லை. என்ன எழுதுவது என்று திகைத்தேன். அப்போது ஒர் அற்புதமான யோசனை தோன்றியது. என்ன என்ன படித்தேன் என்று எழுதலாமே! நம்முடைய காலத்துக்குப் பிறகு நம்முடைய சந்ததிகள் இதைப் பார்த்து, அடேயப்பா இவர் எத்தனை புத்தகம் படித்திருக்கிறார் என்று பிரமித்துப் போவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/14&oldid=1149391" இலிருந்து மீள்விக்கப்பட்டது