பக்கம்:புது டயரி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

புது டயரி


சொன்னார். ‘ஒர் ஊரில் ஒருவன் பணக்காரனாக, பிறருக்கு வழங்குபவனாக இருந்தால், அவனைத் தேடிக் கொண்டு நாலு திசைகளிலிருந்தும் பரிசைப் பெறுவதற்குரிய புலவர் முதலிய பலரும் வருவார்கள். தரமறிந்து பரிசளிப்பது இருக்கிறதே, அதுதான் அருமையான காரியம். பணத்தைக் கொடுப்பது மிகவும் எளிய செயல். ஆகையால் பெரிய வண்மையையுடைய செல்வனே, அந்த உண்மையை நீ அறிந்தாயானால், புலவர்களிடத்தில் எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் செயலை வைத்துக் கொள்ளாதே’ என்றார்.

“ஒருதிசை ஒருவனை உள்ளி, நால்திசைப்
பலரும் வருவர், பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்!
அதுநற்கு அறிந்தனை ஆயின்,
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.”

(உள்ளி-எண்ணி, பரிசில் மாக்கள்-பரிசிலைப் பெறும் புலவர், பாணர் முதலியோர். நற்கு-நன்றாக, பொது நோக்கு-எல்லாரையும் ஒரே மாதிரிப் பொதுவாக மதித்தல். ஒழிமதி-நீங்குவாயாக.)

கபிலர் என்ற புலவர் மலையமான் திருமுடிக்காாி என்ற வள்ளலைப் பார்த்துச் சொன்ன பாட்டு இது. வரிசையறியும் ரசிகனைத் தேடும் கலைஞர்களே உண்மைக் கலைஞர்கள். ரசிகன் தரம் அறிந்து, நயம் அறிந்து, நுட்பம் அறிந்து தலையை அசைத்தால் போதும்; ஆயிரம் பொன்னுக்குச் சமானம் அல்லவா அது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/135&oldid=1152420" இலிருந்து மீள்விக்கப்பட்டது