பக்கம்:புது டயரி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

புது டயரி

 தலையிலிருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்ட வைஷ்ணவர் கோபம் அடையவில்லை. “சபாஷ், காக்காய்! நீ ஸ்ரீரங்கத்துக் காக்கையாகத்தான் இருக்கவேணும். இப்படியே இந்த மதில் சுவரை மேலே இடி; நான் கீழே இடிக்கிறேன்” என்றாராம்!

இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. சமயபேத உணர்வு எவ்வளவு பைத்தியக்காரத்தனமான விளைவை உண்டாக்கும் என்பதைப் புலப்படுத்த இப்படி எவ்வளவோ கதைகள் வழங்குகின்றன. “அரிசிவாரு என்று வைஷ்ணவர்கள் சொல்லமாட்டார்கள். இடையே சிவா என்ற சொல் வருகிறதல்லவா? அமுதுபடி எடு என்று தான் சொல்வார்கள்” என்று சும்மா கற்பனையாகச் சொல்வதுண்டு.

திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மாணாக்கர் வித்துவான் தியாகராச செட்டியார். அவர் பச்சைச் சைவர். பிள்ளையவர்கள் புராணங்களில் விஷ்ணுவையும் வைஷ்ணவர்களையும் தாழ்வாகச் சொல்லும் இடங்கள் உண்டு. அவற்றைப் பார்த்துச் செட்டியார் மகிழ்ச்சி அடைய மாட்டாராம். “இவ்வளவு சாமானியமாகவா சொல்கிறது? கடுமையாகச் சொல்ல வேண்டாம்?” என்பாராம். என்னுடைய ஆசிரியப் பிரான் இந்தச் செய்தியைச் சொன்னார்கள்.

ஒரு முறை தியாகராச செட்டியார் ஒரு வைஷ்ணவ அன்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு குழந்தை அழுக்குப் பண்ணிவிட்டது. அந்த வைஷ்ணவர் சும்மா இராமல், “உங்கள் பெருமான் பூசும் திருநீற்றைக் கொண்டு வந்து அதன் மேலே போடச் சொல்லுங்கள்” என்றார், அவர் சாம்பலையே இடக்காகத் திருநீறு என்று குறித்தார். செட்டியார் சும்மா விடுவாரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/157&oldid=1153050" இலிருந்து மீள்விக்கப்பட்டது