பக்கம்:புது டயரி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

புது டயரி

 தேன். இராமேசுவரத்தில் இராமநாத சுவாமியைத் தரிசித்துக் கொண்டோம். பிறகு தனுஷ்கோடி சென்று நீராடி விட்டு வரலாமென்று புறப்பட்டோம். அப்போதெல்லாம் இராமேசுவரத்தில் மிகுதியான உணவுச்சாலைகள் இல்லை. தனுஷ்கோடியில் நீராடிவிட்டு வந்து இராமேசுவரத்தில் உணவு கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு ஒர் உணவுச் சாலையில் எங்கள் இருவருக்குமுரிய சாப்பாட்டை எடுத்து வைக்கச் சொல்லி, அதற்குரிய பணத்தையும் கொடுத்து விட்டுப் புறப்பட்டோம்.

தனுஷ்கோடியில் நீராடி இராமர் சந்நிதி சென்று தரிசனம் செய்தோம். அங்கே ஒர் அன்ன சத்திரம் இருந்தது. ஐயரவர்கள் அதைக் கண்டவுடன் அதற்குள் நுழைந்தார்கள். அங்கே உண்ணலாம் என்ற எண்ணம் வருகிறவர்கள் பெயர்களை ஒருவர் எழுதிக் கொண்டார். ஐயரவர்கள் தம் பெயரை, ‘வேங்கடராமன்’ என்று சொன்னார்கள். அங்கே தூய்மையான எளிய உணவை உண்டோம்.

உண்டுவிட்டு வெளியில் வந்த பிறகு, “இராமேசுவரத்தில் ஹோட்டலுக்கு முன்பணம் கொடுத்திருக்கிறேராமே!” என்று ஐயரவர்களிடம் சொன்னேன். “பணம் போனால் போகட்டும், அங்கே எத்தனையோ அசுத்தமான நிலையில் சாப்பிட வேண்டியிருக்கும். இங்கே எந்தப் புண்ணியவானோ இந்தச் சத்திரத்தை வைத்திருக்கிறார். இங்கே கிடைக்கும் தூய்மையான உணவைச் சாப்பிட்டதனால் நமக்குத்தான் புண்ணியம்” என்றார்கள். அந்த வேங்கடராமன் உண்டதால் சத்திரம் வைத்தவர்களுக்குக் கிடைத்த புண்ணியத்துக்கு அளவே இராது என்று நான் எண்ணிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/159&oldid=1153053" இலிருந்து மீள்விக்கப்பட்டது