பக்கம்:புது டயரி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

புது டயரி


மீண்டும் எழுதத் தொடங்க வேண்டுமென்று மூர்த்தன்யமாக உட்கார்ந்தேன். எதை எழுதுவது? மூளை காலியாக இருந்தது. ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. பழக்கமும் விட்டுப் போய்விட்டது. காலையில் பத்திரிகையில் ஒரு பெருந்தலைவர் இறந்த செய்தி வந்திருந்தது. அதை எழுதினேன். போயும் போயும் மாசம் முதலில் இந்த மரணச் செய்தியையா எழுதுவது என்று உடனே அதை அடித்து விட்டு, அந்தப் பக்கத்துக் கடைசி இரண்டு வரிகளில் அதை எழுதினேன். மேலே, என்னைப் பார்க்க வந்த சாமியாரைப் பற்றி எழுதினேன். எவ்வளவு வேகமாக எழுத முனைந்தேனே, அவ்வளவு வேகமாகச் சோம்பல் வந்துவிட்டது மனைவியும் வந்தாள். மூடி டிராயரில் வைத்து விட்டேன்.

மறுபடியும், எங்கேயாவது பேசப்போனால் அதை ஒரு வரியில் அந்தத் தேதியில் எழுதினேன். அப்படியே ஒன்று இரண்டு கட்டுரைகள் எழுதின தேதிகளைக் குறித்தேன். டயரி டிராயரில் தூங்கிக்கொண்டிருந்தது.

மார்ச்சு மாதம் முதல் தேதி வேதாளம் மறுபடியும் வந்தது. டயரியை எடுத்து வைத்துக் கொண்டேன். அப்பொழுது என் மனைவி வந்தாள். “என்ன, நீங்கள் டயரி எழுதப் போகிறேன் என்கிறீர்கள். முதலில் அஞ்சாறு நாள் எழுதியிருக்கிறீர்கள். பிறகு அங்கங்கே ஒரு வரி இரண்டு வரி மட்டும் எழுதியிருக்கிறீர்கள். இதற்குத் தானா எட்டு ரூபா கொடுத்து இதனை வாங்கினீர்கள்?” என்று கேட்டாள்.

“இதை நீ படித்துப் பார்த்தாயா?”

“ஏன், பார்க்கக் கூடாதா?” “பிறருடைய டயரியைப் படிப்பது நாகரிகம் அல்ல, குற்றங்கூட என்று சொல்வார்கள்!” .

“மற்றவர்கள்தாமே பார்க்கக் கூடாது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/17&oldid=1149398" இலிருந்து மீள்விக்கப்பட்டது