பக்கம்:புது டயரி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரியாத சங்கடம்

175

 தார். திம்மிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. “எந்துண்டி வஸ்தி” (எங்கிருந்து வந்தாய்?) என்று மறுபடியும் கேட்டாள். அதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ சைகை செய்தார். அவள் கோபமாகப் பதில் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டாள். இரவில் அவருக்குத் தாகம் ஏற்பட்டது. கதவைத் தட்டினார். திம்மி எழுந்து வந்து கதவைத் திறந்து நாய் போலச் சீறினாள்; என்ன என்னவோ தெலுங்கில் பேசி வைதாள். அவர் சைகையால் தாகம் என்பதைக் குறிப்பித்தார். அவள் அதைக் கவனிக்கவே இல்லை. படபட வென்று தெலுங்கில் பேசிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு போய்விட்டாள். இரவெல்லாம் கம்பருக்குத் தூக்கமே இல்லை. வேறிடத்துககுப் போய்ப் படுக்கலாம் என்றாலோ, தெரியாத ஊரில் எங்கே போவது? இங்கே ஒரு திம்மி வந்ததுபோல அங்கே ஒரு பொம்மி வந்தால் என்ன செய்வது? இவளாவது வார்த்தையளவிலே நின்றாள். அந்தப் பொம்மி கையில் எதையாவது எடுத்து வந்துவிட்டால்?

எப்பொழுது விடியும் என்று காத்திருந்து விடிந்தவுடன் அவர் புறப்பட்டுவிட்டார். அன்று இரவு மொழி தெரியாமல் தாம் பட்ட அவஸ்தையை ஒரு பாட்டிலே வைத்துப் பாடினார்.

“ஏமிரா வோரி என்பாள்;
எந்துண்டி வஸ்தி என்பாள்;
தாம்இராச் சொன்ன எல்லாம்
தலைகடை தெரிந்த தில்லை;
போம்இராச் சூழும் சோலை
பொரும்கொண்டைத் திம்மி கையில்
நாம்இராப் பட்ட பாடு
நமன்கையில் பாடு தானே!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/182&oldid=1153235" இலிருந்து மீள்விக்கப்பட்டது