பக்கம்:புது டயரி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

புது டயரி

 எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். குடையைப் பிரித்தால் ஒரு கம்பியின் நுனியில் துணி ஒட்டாமல் மேலே போயிருந்தது. குழந்தை தாறுமாறாகத் துண்டை உடுத்துக்கொள்ளுமே, அப்படியிருந்தது. வேறு வழி இல்லாமல் அதைப் பிடித்துக்கொண்டு போனேன். அதாவது கிடைத்ததே! கம்பி உடைந்த குடைகளால் என்ன உபயோகம்? பஸ் அடிவரையில் அந்தக் குடை எனக்குக் கவசமாக உதவியது.

அன்று அலுவலகத்துக்குச் சிறிதுநேரம் கழித்துப் போனேன். ‘கம்பியின் நுனியில் துணியை இழுத்து வைத்து ஊசியால் தைத்து விட்டால் குடை சரியாகிவிடும். இதைப் பார்த்து இவள் செய்யக் கூடாதா?’ என்று கோபம் வந்தது. மாலையில் வீட்டுக்குப் போனவுடன் முதல் காரியமாக இதைத் தைக்கச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன்.

மாலையில் வீட்டுக்குள்ளே நுழையும்போதே அவளைக் கூப்பிட்டேன். “நீ தையல் மிஷின் வைத்திருக்கிறாயே! எதை எதையோ தைக்கிறாயே! இந்தத் துணியைக் கம்பியின் நுனியோடு வைத்துத் தைக்கப்படாது?” என்று கேட்டேன்.

அவள் இடிஇடியென்று சிரித்தாள். காலையில் கையில் கரண்டியோடு, முகத்தில் ஆத்திரத்துடன் நின்ற அவள் கோபத்தையும் இப்போது அவள் முகமெல்லாம் சிரிப்பு வழிய நின்ற கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். “இந்தப் பெண்களுக்கு எப்படியெல்லாம் கோலங்களை மாற்றிக்கொள்ளத் தெரிகிறது!” என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/21&oldid=1149413" இலிருந்து மீள்விக்கப்பட்டது