பக்கம்:புது டயரி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சென்ற இடம் எல்லாம்...

அவர் ஏழை. எவ்வளவு தூரமானலும் நடந்தே செல்வார். ஆகையால் அவருக்குச் செருப்பு மிகவும் அவசியம். அதைக் கூடிய வரைக்கும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தார். பழைய செருப்புப் பிய்ந்துவிட்டது. புதிய செருப்பு வாங்கினார். ஒருநாள் போகும் வழியில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. உள்ளே போய்ப் பெருமாளைச் சேவித்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணம் எழுந்தது. காலில் செருப்பு இருந்தது. அதோடு கோயிலுக்குள் போக முடியாது. பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருந்தது. கோயிலுக்கு வெளியில் செருப்பைக் கழற்றிவைத்துவிட்டு உள்ளே சென்று விரைவாகத் தரிசனத்தை முடித்துக்கொண்டு வந்துவிடலாம். அதற்குள் யாராவது செருப்பை எடுத்துக் கொண்டு போய்விட்டால்? அவர் மனம் தடுமாறியது. ‘சிறிது நேரந்தானே? அதற்குள் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்?’ என்று சமாதானம் செய்துகொண்டு செருப்பை வெளியே கழற்றி வைத்துவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தார். நேரே பெருமாள் சந்நிதிக்குள் சென்றார். தாயாரைப் பிறகு வேண்டுமானல் சேவித்துக் கொள்ளலாம். பெருமாளைச் சேவித்துக்கொண்டு போய் விடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/30&oldid=1149469" இலிருந்து மீள்விக்கப்பட்டது