பக்கம்:புது டயரி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

புது டயரி

 உள்ளே போன போது பட்டாசாரியார் இருந்தார். அவர் வந்த வைஷ்ணவரைக் கண்டதும், “அர்ச்சனை பண்ண வேண்டுமா?” என்று கேட்டார். “கற்பூரம் பண்ணினால் போதும்” என்று இவர் சொன்னர். அப்படியே அவர் செய்துவிட்டுத் தீர்த்தம் கொடுத்தார். சடகோபம் சாதிப்பதற்கு முன்பு பட்டாசாரியார் எதையோ தேடினார். சிறிது நேரமாயிற்று, வந்தவருக்கோ மிகவும் அவசரம். செருப்பை யாராவது தூக்கிக்கொண்டு போய் விடுவார்களோ என்ற அச்சம். பட்டாசாரியார் சடகோபம் சாதிக்கத் தாமதம் பண்ணினார். வந்தவர் பொறுமையை இழந்தார். “சுவாமி சீக்கிரம் செருப்புச் சாதியுங்கள்”, என்றார். அவருடைய உள்ளத்தில் இருந்த செருப்பின் ஞாபகம் வார்த்தையில் வெளியாகிவிட்டது. எங்கே என்ன வேலையில் இருந்தாலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று சொல்லி, ‘செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப்போலே’ என்று இந்த வரலாற்றை நினப்பூட்டுவார்கள்.

இந்த அனுபவம் அந்த வைஷ்ணவருக்கு மட்டுமா உண்டாயிற்று? புதிய செருப்பு வாங்கின எல்லாருமே எங்கேயாவது நாலு பேர் நடமாடும் இடத்தில் அதைக் கழற்றி வைக்க நேர்ந்தால் அதையே நினைத்துக்கொண்டு தான் இருப்பார்கள். எல்லாருமே ‘செருப்பு வைத்துச் சேவடி தொழுகிறவர்களே!’

ஒருகால் சில பேருக்கு அந்த நினைவு வராதிருக்கலாம். அவர்கள் பாக்கியசாலிகள். என்னைப் பொறுத்தமட்டில் நான் அந்த வைஷ்ணவர் கோஷ்டியில் சேர்ந்தவன்தான். எத்தனையோ ஜாக்கிரதையாக இருந்தும் பல ஜோடிச் செருப்புகளை இழந்திருக்கிறேன். அதுவும் அடிக்கடி கூட்டங்களுக்குப் போக வேண்டியிருப்பதனால் இந்தச் செருப்புத் தியாகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது நிகழ்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/31&oldid=1149470" இலிருந்து மீள்விக்கப்பட்டது