பக்கம்:புது டயரி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்ற இடம் எல்லாம்

25

 ஒரு முறை ராஜபாளையத்துக்குப் போயிருந்தேன். ஒரு கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன். மேடைக்குப் போவதற்கு முன் செருப்பை எங்காவது பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டுமென்று பார்த்தேன். என் எண்ணத்தை அறிந்த செயலாளர், ஓர் இடத்தைக் காட்டி, “இங்கே விடுங்கள்; யாரும் எடுக்கமாட்டார்கள்” என்றார். அவர் காட்டிய இடம் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்தது; ஒரு ஹாலில் இருந்தது. அங்கே செருப்பை விட்டு விட்டு மேடைக்குச் சென்றேன்.

கூட்டத்தில் நான் மட்டும் பேசினேன். அவைத் தலைவர் ஒருவர் இருந்தார். வரவேற்பு முதல் நன்றியுரை வரையில் எல்லாம் நடைபெற மூன்றுமணி நேரம் ஆயிற்று. கூட்டம் முடிந்தவுடன் செருப்பை விட்ட இடத்துக்குப் போய் அதைப் போட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டேன். “நானே எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று செயலாளர் போனார். நான் பேசின மேடையின் கீழே இறங்கிவந்து நின்றேன். அது பெரிய கலையரங்கம், போனவர் வரவில்லை. உடனிருந்த அன்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன் ஆனால் என் மனத்தில் செருப்பு ஞாபகமே இருந்தது. கால்மணியாகியும் போன நண்பர் வரவில்லை. “எங்கே, செருப்பை எடுத்துவரப் போனவர் வரவில்லையே” என்று கேட்டேன். அவருடன் சென்ற ஒருவர் வந்து, “இதோ வந்து விடுவார்” என்றார்.

அரை மணி ஆயிற்று. செருப்புத் தொலைந்து போயிற்று என்றே தீர்மானித்துக் கொண்டேன். உடன் இருந்தவர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். என்னை அழைத்துச் செல்ல வேண்டிய காரையும் காணோம். “அவசரமாகப் பக்கத்தில் போயிருக்கிறார், வந்துவிடுவார்” என்று அன்பர்கள் சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/32&oldid=1149474" இலிருந்து மீள்விக்கப்பட்டது