பக்கம்:புது டயரி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

புது டயரி

 பிற்பகல் நேரத்தில் அவர்கள் காபி பருகும்போது நான் அருகில் இருப்பேன். “உனக்குக் கொடுக்காமல் நான் சாப்பிடுகிறேனே” என்று வருந்துவார்கள். அவர்கள் உள்ளம் வேதனைப்படுவதை அறிந்து அவர்கள் கொடுக்கும் காபியை உண்டேன். பிறகு இருவேளையும் காபி சாப்பிடத் தொடங்கினேன். அவர்கள் அமரரான பிறகு மறுபடியும் காபியை விட்டுவிட்டேன்.

காபி சாப்பிட மீட்டும் தொடங்கியபோது என்னுடைய அன்னயார் இருந்தார்கள். நான் காபி சாப்பிடுவதைக் கண்டு அவர்களுக்குப் பெருமகிழ்ச்சி. அப்போது ஒரு விசித்திரத்தைக் கவனித்தேன். காபி தாய்ப் பாசத்தையும் மாற்றிவிடுகிறது என்பதை உணர்ந்தேன். நான் பகலுணவு உண்ண நேரமானல் என் அன்னையார் உண்ணாமல் காத்திருப்பார்கள். எத்தனை நேரமானலும் சரி, உண்ணாமல் இருப்பார்கள். ஆனால் காபி விஷயத்தில் அப்படி இல்லை; எனக்குக் கொடுக்காமலே சாப்பிட்டு விடுவார்கள். அப்போதுதான் காபியின் வலிமையை உணர்ந்தேன். தாயன்பையும் மாற்றும் கொடிய பானம் அது. இப்படிச் சொல்லாமல், பற்றை மறக்கச் செய்யும் ஞானதீர்த்தம் அது என்றும் சொல்லலாம் அல்லவா?

ஞான தீர்த்தம் என்று சொன்னவுடன் எனக்கு விட்ட கதை ஞாபகத்துக்கு வருகிறது. அந்தப் பெரியவர் காபியை ஞானதீர்த்தம் என்று சொன்னாரே, அப்போது இரண்டு தம்ளரில் காபி வந்தது என்று சொன்னேன் அல்லவா? எனக்கும் சேர்த்துத்தான் வந்தது. “நான் காபி சாப்பிடுவதில்லையே!” என்று சொன்னேன். அந்தப் பெரியவர் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார். “எப்போதுமே சாப்பிடுகிற தில்லையா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன். “இது பெரிய விஷயம். தவம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பாராட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/55&oldid=1149582" இலிருந்து மீள்விக்கப்பட்டது