பக்கம்:புது டயரி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞான தீர்த்தம்

47

 இந்தத் தண்ணீர்க் காபியையா கொடுத்தனுப்புவது? காபி ஆகிவிட்டதென்றால் நான் ஹோட்டலிலிருந்து வருவித்துக் கொடுத்துவிட்டுப் போகிறேன். இப்படி எங்களை அவமானப்படுத்த வேண்டாம்” என்று மாப்பிள்ளை வீட்டார், சண்டைக்குத் தொடங்கி விடுவார்கள். மற்றச் சீர் வகைகளில் குறைவு இருந்தாலும் சரி பண்ணி விடலாம்; அதைக் கவனிக்காமல் கூட இருப்பார்கள். அடே அப்பா! இந்தக் காபி விவகாரம் இருக்கிறதே, இதனால் இராம ராவண யுத்தம், பாரதப் பெரும் போரே உண்டாகிவிடும்.

சரியான காலத்தில் காபி சாப்பிடாவிட்டால் காபி சாப்பிட்டதன் சுவாரசியமே கெட்டுவிடுகிறது. அதனால்தான்,

“பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை, உறுபொழுதில்
காபிடடீ அல்ல பிற”

என்று முன்பு ஒரு கிறளைப் பாடினேன்.

“விருந்தின் பயனெல்லாம் வீணாகும் காபி
அருந்தத் தராமல்விட் டால்”

என்பது அநுபவத்திலே எழுந்த மற்றொரு கிறள்.

ஒர் இரகசியம் சொல்கிறேன். நான் காபி சாப்பிடுவதில்லை. காபியின் சுவையை அடியோடு அறியாதவன் அல்ல. இளமையில் சாப்பிட்டேன்; பிறகு விட்டு விட்டேன். என்னுடைய ஆசிரியப் பிரானாகிய டாக்டர் ஐயரவர்கள் காபி சாப்பிடுவதுண்டு. அவர்கள் இளம் பிராயத்தில் காபி சாப்பிடவில்லை. பிறகு சாப்பிட்டார்கள். அப்போது தம்முடைய தந்தையாருக்குத் தெரியாமல் சாப்பிட்டார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/54&oldid=1149581" இலிருந்து மீள்விக்கப்பட்டது