பக்கம்:புது டயரி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

புது டயாி

 சிவபெருமானுடைய மூர்த்தங்களில் சோமாஸ்கந்த மூர்த்தம் என்பது ஒன்று. பரமசிவன், பார்வதி, அவர்களிடையில் முருகன் இப்படி எழுந்தருளியிருக்கும் கோலம் அது. ஒவ்வொரு சிவாலயத்திலும் இந்த மூர்த்தியைப் பார்க்கலாம். காபியைச் சோமாஸ்கந்த மூர்த்தி என்று நான் சொல்வது வழக்கம், பால்தான் பரமசிவன், டிகாக்ஷன் பார்வதி; சர்க்கரை முருகப்பெருமான் காலையில் காபி சாப்பிடும்போது இந்த உபமானம் நினைவுக்கு வந்தால் புண்ணியந்தானே? அதனால்தான் இதைச் சொல்லி வைக்கிறேன்.

கல்யாணங்களில் சம்பந்திச் சண்டை உண்டாகும். அநேகமாகப் பாதிக்குமேல் காபியினால் வந்த சண்டையாகவே இருக்கும். குறித்த காலத்தில் காபி வரவில்லையென்று பிள்ளை வீட்டுக்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள். “புதுப்பால் வந்தவுடன் போட்டுக் கொடுக்கலாம் என்று இருந்தேன்” என்று பெண்ணப் பெற்றவர் சமாதானம் சொல்வார். “புதுப்பால் சாயங்காலம் கறப்பான்; அதற்கப்புறந்தான் காபி கிடைக்குமோ?” என்று மாப்பிள்ளையுடன் வந்திருக்கும் ஓர் இளைஞன் சொல்வான். அநேகமாக அவன் தன் வீட்டில் தண்ணீர்க் காபியைச் சாப்பிடுகிறவனாக இருப்பான். இங்கே மாப்பிள்ளைக் கட்சிக்கு வக்காலத்து வாங்கி ஜபர்தஸ்துப் பண்ணுவான்.

மாப்பிள்ளை விட்டுக்கு வேண்டியவர்கள் வந்து கொண்டே யிருப்பார்கள். அப்போதப்போது காபி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். சில சமயங்களில் நேரமாகிவிட்டால் காபிக்கு சிறிது ஜலதோஷம் பிடித்துவிடும். பெண் வீட்டுக்காரர் என்ன, பாற்கடலா வைத்திருக்கிறார்? காபி சற்றே தரம் மாறியிருந்தால் பிள்ளை வீட்டுக்காரர்களுக்குக் கோபம் வந்துவிடும். “முக்கியமான மனிதர் வந்தாரே என்றுதானே காபிக்குச் சொல்லியனுப்பினோம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/53&oldid=1149576" இலிருந்து மீள்விக்கப்பட்டது