பக்கம்:புது டயரி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாவது

69

 பிடித்துக்கொண்டு மூதேவி பிடித்தவன் மாதிரி இருந்த நிலை ஒரு கணத்தில் மாறிவிட்டது. பல்வலி இன்ப உணர்ச்சியாக மாறியது. முகத்தில் புதிய ஒளி பிறந்தது. பல்லினிடையே அந்தச் சஞ்சீவியைச் சுவைத்துச் சுவைத்து இன்புற்றேன்.

“எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் குருநாதர்.

“மகானுபாவரே இந்த அநுபவத்தை எப்படி வாயால் சொல்வது அதிசயம் அற்புதம் பிரம்மானந்தம்” என்றேன்.

“இனிமேல் புகையிலையைத் துப்பிவிடுங்கள். இந்தாருங்கள், இந்தப் புகையிலையைப் பத்திரமாக மூடி வைத்துக் கொள்ளுங்கள். மறுபடி வலி ஏற்பட்டால் வையுங்கள்” என்று சிறிதளவு புகையிலையைத் தந்தார்; வாங்கி வைத்துக்கொண்டேன்.

வெற்றிலை பாக்குப் புகையிலையை வைக்கும் பெட்டியைச் செல்லப்பெட்டி என்று சொல்கிறார்கள். பார்ப்பதற்குப் புத்தகத்தைப் போல இருக்கும். அதற்கு ஏன் அந்தப் பேர் வந்தது? செல்வப் பெட்டி என்பதுதான் செல்லப் பெட்டி என்று திரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அதில் இருக்கும் செல்வம் எது? இப்போது எனக்கு விளங்கிவிட்டது. இந்தப் புகையிலைதான் செல்வம்!

புகையிலையின் அநுபவத்தைப் பெற்ற எனக்கு அன்று மாலையில் சிறிது பல்வலி இருந்தது போலத் தோன்றியது. ஆனால் எனக்கு முன் போல வேதனை உண்டாகவில்லை. இருந்தால் என்ன? புகையிலயைப் போடுவதற்கு அந்தச் சிறிய வலியே போதுமே புகையிலேயை எடுத்துப் பல்லில் வைத்துக்கொண்டேன். விறுவிறுப்பு, கிளுகிளுப்பு எல்லாம் உண்டாயின. ஆனால் அந்த முதல் அநுபவத்தின் சுகம் இப்போது இல்லை. சிறிது குறைவாகவே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/76&oldid=1150809" இலிருந்து மீள்விக்கப்பட்டது