பக்கம்:புது டயரி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்பதும் ஒரு கலை

79

 தொடங்கிவிட்டன. மேல்நாட்டுக்காரர்கள் எவ்வளவு ஆசையோடு தோசை உண்ணுகிறார்கள் தெரியுமா!

தமிழன் வாழ்வில் எளிமை இருக்கும்; அதே சமயத்தில் சிறப்பும் இருக்கும். இதற்கு இட்டிலி ஒரு பெரிய எடுத்துக்காட்டு. அரிசி, உளுந்து, உப்பு, ஜலம் இவற்றைக் கொண்டே இட்டிலி தயாராகிறது. மற்ற உணவுகளைப் போல ஊர்ப்பட்ட சாமான்கள் வேண்டும் என்பது இல்லை. ஆனால் நல்ல உழைப்பு வேண்டும். உளுந்தை நன்றாக அரைத்து, அளவாகக் கலக்க வேண்டும். அதுதான் கலை. சரியானபடி கலந்து இட்டிலி பண்ணினால் பஞ்சுபோல மெதுவாக இருக்கும். என் நண்பர்கள் வீட்டுக்கு நான் போனால் சில சமயம் இட்டிலி வழங்குவார்கள். அதன் மென்மையையும் வெண்மையையும் பார்த்து, “இதை இலையிலா வைப்பது?” என்று கேட்பேன். “என்ன சொல்கிறீர்கள்?” என்று நண்பர்கள் கேட்பார்கள். “இது மல்லிகைப் பூ மாதிரியல்லவா இருக்கிறது? இதைத் தலையில் அல்லவா வைத்துக்கொள்ள வேண்டும்?” என்பேன்.

சமையல் பண்ணுவதற்குரிய பண்டங்கள் எல்லாம் குறைவற இருந்தால் போதுமா? அவற்றைச் சமைக்கிறவருக்குக் கலையுணர்வு இருக்கவேண்டும். ஒவ்வொரு கலையிலும் கலைஞர்களுக்குள்ளே சிறந்தவர்களாகச் சிலரே இருப்பார்கள். சமையல் கலையிலும் அப்படித்தான். இல்லாவிட்டால் நளனுக்கும் வீமனுக்கும் மட்டும் பெயர் வரக் காரணம் என்ன? கலை என்பது புத்தகங்களைப் படிப்பதனால் மட்டும் வராது. குருவினிடம் பயின்று வர வேண்டும். அதற்கு மேல், கற்றுக்கொள்ளும் மாணாக்கனுக்கு இயல்பாகவே ஓர் உள்ளுணா்வு (intution) இருக்க வேண்டும். சமையற் கலையிலும்கூடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/86&oldid=1151050" இலிருந்து மீள்விக்கப்பட்டது