பக்கம்:புது டயரி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

புது டயரி


பாணி எவ்வளவு தூரம் உடையில் நம்மிடம் கலந்து விட்டது! தாய்மார்கள் உடுக்கும் புடைவைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கின்றன. கட்டடங்களில்தான் எத்தனை வடிவங்கள்! அவ்வாறே உணவுக் கலையும் விரிந்துகொண்டே வருகிறது. நாம் இப்போதெல்லாம் மிளகாய் இல்லாமல் சமையல் பண்ணவே முடியாது. ஆனால் அந்த மிளகாய் நம் நாட்டுச் சரக்கு அல்ல. அமெரிக்காவிலுள்ள சிலி என்ற பிரதேசத்திலிருந்து வந்தது அது. அதனால்தான் அதற்குச் சிலீஸ் (Chillies) என்று ஆங்கிலத்தில் பெயர் வழங்குகிறது. மிளகுதான் பழைய காலத்தில் இந்த நாட்டில் இருந்தது. கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் இறைவனுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதங்களுக்குச் சேர்க்க இன்ன இன்ன பண்டங்கள் இன்ன இன்ன அளவு என்ற செய்தியைக் காணலாம். அவற்றில் மிளகு பலம் இவ்வளவு என்று இருக்குமே ஒழிய மிளகாயைப் பற்றிய பேச்சே இல்லை. மிளகாயைப் போல் எத்தனையோ உணவுப் பொருள்கள் வேறு நாடுகளிலிருந்து வந்து இங்கே நிலைத்துவிட்டன; நாமே பயிரிடுகிறோம்.

அப்படியே உணவு வகைகளும் வெளியிலிருந்து எத்தனையோ வந்திருக்கின்றன. பஜ்ஜியும் சொஜ்ஜியும் நம்முடையவை அல்ல; பாதாம் கீர் என்ற பெயரைக் கேட்டாலே ஹிந்தி வழங்கும் நாட்டிலிருந்து வந்தது என்று தெரியவரும். மேல் நாட்டிலிருந்து பிஸ்கோத்தையும் கேக்கையும் ஜாமையும் ஐஸ் கிரீமையும் நாம் தெரிந்து சுவைக்கிறோம். இப்படி நம் சாப்பாடு அகில உலக இணைப்பை காட்டுகிறதாக இருக்கிறது. ஆனாலும் அரிசிச் சாதமும் குழம்பும் ரசமும் நமக்கே சொந்தம்.நம்முடைய ரசத்துக்கு ஈடு இணையே கிடையாது. நம்முடைய இட்டிலியும் தோசையும் உலகத்திலே திக்விஜயம் செய்யத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/85&oldid=1151044" இலிருந்து மீள்விக்கப்பட்டது