பக்கம்:புது டயரி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்பதும் ஒரு கலை

77

 வேரையும் வேரடி மண்ணையும் கூட விழுங்கி விடுகிறது. மனிதன் என்ன செய்கிறான் கீரையைப் பறித்துவந்து வேரை நறுக்கி வெளியிலே போட்டுவிட்டு, தண்டை வேறாக்கிக் கீரையை வேறாக்கி, கீரையால் மசியல் செய்கிறான்; தண்டைக் குழம்பிலே தானகப்போடுகிறான்; உண்ணுகிறான். கீரையைக் கொஞ்சம் மிச்சம் வைத்துப் பிற்பகலில் கீரை வடை பண்ணிச் சாப்பிடுகிறான். மாடு, கீரையை உண்டதற்கும், மனிதன் அதை உண்டதற்கும் எத்தனை வேற்றுமை! ஏன்? மாடு பசிக்கு மட்டும் உண்ணுகிறது. மனிதனே ருசிக்கும் உண்ணுகிறான். அதனால் வெவ்வேறு வகையாகச் சமைத்துச் சுவைகூட்டி உண்ணுகிறான்.

மரகதத் தகடுபோல இலையை விரித்து ஓரத்தில் கறி, கூட்டு, பச்சடி, துவையல், கோசும்பரி, ஊறுகாய் எல்லாம் வைத்து, கீழே வலக்கைப் பக்கத்தில் பாயசமும் பருப்பும் பரிமாறி, பழம், பட்சண வகைகள் இடப்புறம் இட்டு, பிறகு வெள்ளை வெளேரென்று அன்னத்தைப் பரிமாறி, அதன்மேல் நெய்யையும்விட்டால், சாப்பிட உட்கார்ந்தவன் கலை உணர்ச்சி உடையவனாக இருந்தால் அந்தத் தோற்றத்தைக் கண்டே ஐந்து நிமிஷம் அநுபவிக்கலாம். என்ன என்ன நிறம் என்ன என்ன வடிவம் எத்தனை வகையான சுவைகள் ஆறு சுவையில் நூறுவகை தமிழ் நாட்டு உணவிலேதான் எத்தனை சம்பிரமம்! நளச் சக்கரவர்த்தியும் வீமசேனனும் சமையல் கலையில் வல்லவர்கள் என்று சொல்கிறார்கள். பத்துப் பாட்டில் வீமன் சமையல் கலையில் வல்லவன் என்ற செய்தி வருகிறது.

மனிதன் நாகரிகம் வளர வளர அவன் அநுபவிக்கும் பண்டங்களில் பல வகைகள் உண்டாகின்றன. உள்நாடு, வெளிநாடு என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா நாட்டுப் பண்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறான். நாம் உடுக்கும் உடைகளில் எத்தனை வகை! மேல் நாட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/84&oldid=1151039" இலிருந்து மீள்விக்கப்பட்டது