பக்கம்:புது டயரி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உண்பதும் ஒரு கலை

‘செய்வன திருந்தச் செய்’ என்று ஒளவையார் பாடியிருக்கிறார். செய்வன என்றால் எவை? மனிதன் செய்கின்ற எல்லாவற்றையுமே திருத்தமாகச் செய்யவேண்டும் என்பது அந்தப் பாட்டியின் உபதேசம். மனிதன் எத்தனையோ காரியங்களைச் செய்கிறான். இடைவிடாமல் செய்துகொண்டிருப்பது மூச்சு விடுகிற காரியம். அதை அவன் திட்டமிட்டுச் செய்கிறான் என்று சொல்லக்கூடாது, அது தானே நடந்துக்கொண்டிருக்கிறது. அவன் திட்டமிட்டுச் செய்கிற காரியங்களில் மிகவும் முக்கியமானது சாப்பிடுவது. அதைத் திருத்தமாகச் செய்யவேண்டும். சமைப்பதும் திருத்தமாக இருக்கவேண்டும், சாப்பிடுவதும் திருத்தமாக இருக்கவேண்டும். சமையல் ஒரு கலை; சாப்பிடுவதைக் கூடக் கலை என்று சொல்லலாம்.

விலங்குகள் கூட உணவை உண்கின்றன. அதில் கலை என்ன இருக்கிறது?. இப்படி நீங்கள் கேட்கலாம். விலங்குகள் உண்ணுவதற்கும் நாம் உண்ணுவதற்கும் வேறுபாடு இல்லையா? ஒரு வீட்டில் கீரைப் பாத்தி போட்டிருக்கிறார்கள். ஒரு மாடு எப்படியோ அங்கே நுழைந்துவிடுகிறது. தளதள என்று தழைத்து வளர்ந்திருக்கிற கீரையைக் கண்டு சும்மா இருக்குமா? அதைத் தின்னத் தொடங்குகிறது. எப்படி? நாவை நீட்டிக் கீரையை வேரோடு பறித்துச் சமூலமாகத் தின்றுவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/83&oldid=1151034" இலிருந்து மீள்விக்கப்பட்டது