பக்கம்:புது டயரி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

புது டயரி

 சமைத்த சாதத்தைப் பரப்புவார்கள். கீழ்ச்சூடு, மேல் சூடு இந்த இரண்டினாலும் நடுவிலே உள்ள களைந்த அரிசி பக்குவமாய்ச் சாதமாகிவிடும். இப்படியெல்லாம் எத்தனையோ கலை நுணுக்கங்கள்.

சமைக்கிறது ஒரு கலையானால் சாப்பிடுவதும் ஒரு கலை தான். நல்ல பாட்டை ரசிக்கிறவர்கள் ரசித்தால்தான் பாடுகிறவனுக்கு உற்சாகம். அதுபோல நல்ல சாப்பாட்டைச் சுவைத்து உண்டால்தான் சமைத்தவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். என்னுடைய ஆசிரியப்பிரான் தமிழ்ப் பாட்டை நன்றாகச் சுவைத்து இன்புறுவதுபோல உணவையும் சுவைத்து உண்பார்கள். சுவை காணுகிறவர்கள் எதிலும் சுவை காணலாம். பெரிய பெரிய சிற்பங்களில் மட்டுந்தான் கலைத் திறமை என்று சொல்லலாமா? ஒரு சதுர அங்குலத்தில் அமைத்திருக்கும் சிறிய வடிவத்திலே கூடச் சிற்பத் திறனைக் கண்டு மகிழலாம். ஐயரவர்கள் அத்தகைய ரசிகர்கள். பலபல வகையான உணவு வகைகளையும் நன்கு சுவைத்து நுகர்வார்கள். வெறும் துவையல் அல்லது வேப்பிலைக் கட்டியைக் கூடச் சுவைத்துப் பாராட்டுவார்கள். திருப்பனந்தாளில் முன்பு தலைவராக ஸ்ரீ சாமிநாதத் தம்பிரான் என்பவர் இருந்தார். ஐயரவர்களிடம் தேவதா விசுவாசம் உடையவர். ஐயரவர்கள் வந்தால் மடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்திலிருந்து காய்கறிகளையும் கீரை வகைகளையும் பறித்துக்கொண்டு வரச் சொல்வார். அவற்றை ஐயரவர்களிடம் காட்டி, ‘என்ன என்னபடி சமைக்கவேண்டும்?’ என்று கேட்டு அப்படியே செய்யும்படி சமையற்காரருக்குச் சொல்வார். பச்சைப் பசேல் என்றிருக்கின்ற அவற்றைச் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்துவிட்டு, இன்னது இன்னது செய்ய வேண்டும் என்று ஐயரவர்கள் சொல்வார்கள். அப்படியே சமையல் செய்து போடுவார்கள். சமையல்காரர் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/91&oldid=1151073" இலிருந்து மீள்விக்கப்பட்டது