பக்கம்:புது டயரி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்பதும் ஒரு கலை

83

 குளத்தை இறைக்கச் செய்தார் திவான். கட்டுக் காவல் போட்டார். பருப்பு, உப்பு, புளி, மிளகாய், பெருங்காயம் முதலிய சாமான்களைச் சமையற்காரர் சொன்ன அளவில் வாங்கித் தந்தார். அவர் அந்தக் குளத்தில் எப்படி அவற்றைச் சேர்க்க வேண்டுமோ அப்படிச் சேர்த்தார். ஒரு வாரம் வெயிலில் ரசம் காய்ந்தது. பிறகு அதிலிருந்து ரசத்தைக் கொண்டு வந்து திவானிடம் கொடுத்தார். அற்புதமான ரசம் திவான் அந்தக் கைக்குத் தோடாப் பண்ணிப் போட்டாராம். கலைஞர்களை வேலை வாங்கத் தெரிந்தவர்கள் இருந்தால்தான் கலை பரிமளிக்கும்; வளரும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் விழாக் காலங்களில் அன்னம் பாலிக்கும் பெரிய தொண்டை முன் காலத்தில் ஒரு மகான் செய்து வந்தார். அவர் சமையற்காரராக இருந்தார். பிறகு அன்னதான சக்கரவர்த்தியானார். அன்னதான சிவம் என்றால் அக்காலத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய சமையல் ஏற்பாட்டை நான் கண்டு களித்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான பேர்களுக்கு மோர் வேண்டுமே! ஒரு நாள் இரண்டு நாள் பால் வாங்கித் தயிராக்கி மோர் கடைந்துவிட முடியுமா? அவர் ஆறு மாதங்களுக்கு முன்பே அங்கங்கே தயிா் வாங்கி பீப்பாய்களில் அடைத்துக் குளத்தில் போட்டு விடுவார். பிறகு வேண்டியபோது எடுத்து பயன்படுத்துவார். கொஞ்சங்கூடப் புளிக்காது.

சமையல் பண்ணும்போது மூங்கிற் பாயைப் பரப்பி ஒரு முறை உலை வைத்துச் சோற்றைச் சமைத்து அதன் மேல் பரப்புவார்கள். களைந்து வைத்திருந்த அரிசியை அந்தச் சோற்றுப் படலத்தின் மேலே பரப்பிவிடுவார்கள். மறுபடியும் அதன் மேலே மற்றெரு படலம் சூடான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/90&oldid=1151072" இலிருந்து மீள்விக்கப்பட்டது