பக்கம்:புது மெருகு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

புது மெருகு

"நாங்கள் மன்னிப்பதா? இதோ இந்தப் பாட்டுச் சொல்லுமே. அந்தப் பெருமாட்டியின் பேரறிவை. நாங்கள் இனி எந்த இடத்திலும் இந்தப் பிழையைச் செய்யமாட்டோம்."

புலவர் பாட்டை வாங்கிப் பார்த்தார்.

"அறிவில் இளைஞரே ஆண்மக்கள் மாதர்
அறிவில் முதியவரே ஆவர் - அறிகரியோ
தாம்கொண்ட சூலறிவர் தத்தையர் ஆண்மக்கள்
தாம்கொண்ட சூலறியார் தாம்"

என்று இருந்தது.

"பார்த்தீர்களா? இது தான் எங்களுக்கு அறிவூட்டியது. ஒரு சந்தேகம்: இந்தப் பாடல் எந்த நூலில் இருக்கிறது? அதைத் தெரிவித்தருள வேண்டும்."

புலவர் சிறிதும் யோசியாமலே, "இதை அவளே தான் பாடி உங்களிடம் அனுப்பினாள்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்.

அவர்கள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. "ஹா!" என்று அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/119&oldid=1549637" இலிருந்து மீள்விக்கப்பட்டது