பக்கம்:புது மெருகு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பூர நாயக்கர்

117

"நான் தமிழ்ப்புலவன். கவிஞன். பாட்டுக்கள் பாடுவேன். சமுகத்தைக் கண்டுவிட்டுப் போகலாமென்று வந்தேன்" என்று விநயமாகச் சொன்னார் புலவர்.

"ஏதாவது பாடும் பார்ப்போம்" என்று மந்திரியார் உத்தரவிட்டார்.

"நான் எஜமான் விஷயமாகவே ஒரு பாடல் இயற்றி வந்திருக்கின்றேன். விண்ணப்பித்துக் கொள்ள அநுமதி வேண்டும்" என்று புலவர் சொன்னார்.

ஜமீன்தார் தம்முடைய ஹூங்காரத்தால் அநுமதி தந்தார்.

புலவர் கிராமத்துக் கைத்தொழிலாளிகள் பாடும் ராகத்திலே பாட்டைப் பாட ஆரம்பித்தார்.

"கோவைப் பழம்போலே
சிவந்த நாயக்கரே"

என்று தொடங்கினார். பாட்டைச் சொல்லும்போதே உடம்பை நெளித்துக்கொண்டு கையைக் குவித்துக் கோவைப் பழம் என்று தெரியும்படி அபிநயம் பிடித்தார்.

ஜமீன்தாருக்குத் தம் திருமேனியைப் புலவர் வருணிக்கிறார் என்பது தெரிந்தது. அவருக்குத் தெளிவாக விளங்கும் வார்த்தைகளைத்தானே புலவர் சொல்கிறார்?

"கோவைப் பழம்போலே
சிவந்த நாயக்கரே"

என்று புலவர் வலக் கையாலும் இடக் கையாலும் மாறி மாறி அபிநயம் பிடித்துப் பாடினார்.

ஜமீன்தார் ஒரு முறை தம் திருமேனியின் நிறத்தைத் தாமே பார்த்துக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/122&oldid=1549644" இலிருந்து மீள்விக்கப்பட்டது