பக்கம்:புது மெருகு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

புது மெருகு

"கோவைப் பழம்போலே
      சிவந்த நாயக்கரே
குண்டு மணிபோலே
      சிவந்த நாயக்கரே"

என்று பாடிக் குன்றிமணியை அபிநயத்தால் காட்டினார், உலகியல் அறிந்த புலவர். குன்றிமணி என்று சொன்னால் நாயக்கருக்கு விளங்காதென்று 'குண்டுமணி' என்றே சொற் பிரயோகம் பண்ணினார்.

ஜமீன்தார் புன்முறுவல் பூத்தார். கறுத்து அடர்ந்த மீசைக்கு அடியில் வெண்பல் வரிசை பளிச்சென்று மின்னியது. புவ்வருக்கு உற்சாகம் மூண்டு விட்டது.

"காவிக் கல்லைப் போலே
சிவந்த நாயக்கரே"

என்று மூன்றாவது அடியைப் பாடும்போது ஜமீன்தார் சொக்கிப் போனார். கோவைப் பழமும் குன்றிமணியும் காவிக்கல்லும் முன்னாலே நின்று உல்லாஸ நடனம் புரிவதாக அவருக்குத் தோன்றியது. அடிக்கடி தம் மந்திரியின் முகத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

"காவிக் கல்லைப்போலே
சிவந்த நாயக்கரே
கற்பூர நாயக்கரே"

என்று ஜமீன்தாரின் திருநாமத்தைப் பாட்டிலே இணைத்து முடித்தார் புலவர்.

"நல்லா இருக்குது" என்று ஜமீன்தார் தம்மையும் மறந்து சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/123&oldid=1549645" இலிருந்து மீள்விக்கப்பட்டது