பக்கம்:புது மெருகு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

புது மெருகு

தோளைக் கொட்டவில்லை; முகம் மலரவில்லை. சேரன் கையிற் சென்றது ஏடு; பார்த்துவிட்டுக் கீழே வைத்தான்.

பாண்டியன் மீட்டும் எடுத்துக் கூர்ந்து கவனிக்கலானான். அவன் கண்கள் கலங்கின. உள்ளத்திலே துக்கம் குமுறிற்றா? கோபம் மூண்டதா? - என்னவென்று சொல்ல முடியவில்லை. சூழ நிற்கும் படைத் தலைவர்களுக்கோ ஒன்றும் தெரியவில்லை.

பாண்டியன் வாய் திறந்தான்: "என்ன அழகிய பாட்டு! கபிலரது வாக்கிலே எத்தனை சுவை! கருத்து, வைரம் பாய்ந்ததுபோல இருக்கிறது. இத்தகைய புலவர் பெருமான் ஒருவரே போதும், பாரியின் இறுமாப்பு மேலும் மேலும் வளர்ந்து ஓங்குவதற்கு. கபிலர் நம்முடைய கருத்தையும் முயற்சியையும் அறிந்திருக்கிறார். நம் முயற்சி வீணென்று சொல்லி வீறுபேசுகிறார். நம்மைப் பரிகாசம் செய்கிறார். பாட்டின் கருத்தைப் பகைவரது கருத்தென்று எண்ணும்போது நம் உடம்பு துடிக்கிறது; உள்ளம் சினத்தால் குமுறுகிறது. அதன் கவிச்சுவையைப் பார்க்கும்போது - பகைமையை மறந்து தமிழ் இன்பத்தை மாத்திரம் நுகரும்போது - நம்முடைய உள்ளம் மலர்கிறது; தலை வணங்குகிறது. ஒவ்வொரு சொல்லையும் சுவைத்துச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழும்புகிறது....போர்க்களத்தில் புலமைக்கு இடமில்லை; வாள் முனையில் தமிழின்பத்துக்கு வகை இல்லை; பகையுணர்ச்சிக்குமுன் கலையின் சாந்திக்குத் தரிப்பில்லை.... என்ன இது! என்னை இந்தக் கவிதை அடிமையாக்கிவிடுகிறதே! கவிதையை விட்டுக் கருத்தைப் பார்க்கவேண்டும். கபிலரை மறந்து பாரியை நெஞ்சின் முன் நிறுத்தவேண்டும். நீங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/25&oldid=1548619" இலிருந்து மீள்விக்கப்பட்டது