பக்கம்:புது மெருகு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

புது மெருகு

"அவர்களுடைய முயற்சியைச் சொல்வதா? அடக்கத்தைச் சொல்வதா? திருப்தியைச் சொல்வதா? அவர்களும் ஒரு விதத்தில் அரசர்களாகிய உங்களைப் போன்றவர்களே!"

"கவிஞர்களென்ற பெயரே சொல்லுமே."

"எங்கெங்கே ஈகையாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போகிறார்கள். பழுத்த மரம் எங்கே உண்டோ அங்கே பறவைகள் போய்ச் சேருகின்றன அல்லவா? கடப்பதற்கரிய வழிகள் நீளமானவை என்று நினைக்கிறார்களா? இல்லை இல்லை. ஒரு வள்ளல் இருக்கிறானென்றால் நெடிய என்னாது சுரம் பல கடக்கிறார்கள். அவனை அடைந்து தமக்குத் தெரிந்த அளவிலே அவனைப் பாடுகிறார்கள்.அவன் எதைக் கொடுக்கிறானோ அதைத் திருப்தியோடு பெற்றுக்கொள்கிறார்கள். பெற்றதைத் தாமே நுகராமல் தம்முடைய சுற்றத்தாரும் நுகரும்படி செய்கிறார்கள். நாளைக்கு வேண்டுமென்று வைத்துக் கொள்வதில்லை. திருப்தியாக உண்ணுகிறார்கள்; எல்லோருக்கும் தாராளமாகக் கொடுக்கிறார்கள். மறுபடியும், வரிசை அறிந்து கொடுக்கும் உபகாரி எங்கே இருக்கிறானென்று தேடிப் புறப்பட்டு வருகிறார்கள். வரிசை அறிவோர் கிடைக்காவிட்டால் வருந்துகிறார்கள். இந்த நல்ல பிராணிகளால் யாருக்காவது தீங்கு உண்டோ? கனவிலே கூட அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்க மாட்டார்கள்; நினைக்கவும் தெரியாது. பரம சாதுக்கள். நான் சொல்வது உண்மையல்லவா?"

"முக்காலும் உண்மை. புலவர்களால் நன்மை உண்டாகுமேயன்றித் தீமை உண்டாக வழியே இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/45&oldid=1548901" இலிருந்து மீள்விக்கப்பட்டது