பக்கம்:புது மெருகு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிர்வாண தேசம்

59

கிடக்கும் கடலுக்கு அந்த உயிர்கள் அன்று பலியாயின. அந்தக் கடலின் பசிக்குக் கப்பல் எம்மாத்திரம்!

கடலின் குமுறல் அடங்கியது; சண்டமாருதமும் சளைத்து நின்றது. கப்பலையும் அதிலுள்ள உயிர்களையும் விழுங்கிவிட்டுப் பழைய சாந்தியுடன் சமுத்திரம் பிரணவ கோஷம் செய்யத் தொடங்கியது. அந்தக் கப்பலில் பிரயாணம் செய்தவர்களுடைய ஆசைகள் என்ன என்ன விதமாக இருந்தனவோ, அவர்களுடைய வரவை எதிர்பார்த்து யார் யார் ஆவலாகக் காத்திருக்கின்றார்களோ? சமுத்திரத்திலே அடித்த சண்டமாருதம் தான் செய்த படுகொலையை அவர்களுக்குத் தெரிவிக்குமா என்ன? உயிரிழந்தவர்களுடைய சடலங்கள் கடற் பிராணிகளுடைய பசியைத் தணித்தன. அவர்களுடைய உயிர்கள் எல்லையற்ற ஒன்றிலே போய்ச் சேர்ந்தன.

அந்தப் புயலின் கதையை உலகத்துக்குச் சொல்ல ஒரு சாட்சிகூட இல்லை என்றுதான் தோற்றியது. அந்தத் தோற்றம் பொய். அதோ ஒரு மனிதன் ஒரு துண்டுக்கட்டையைப் பிடித்துக்கொண்டு கடலிலே மிதக்கிறான். அந்தப் பெரும் புயலின் வேகத்தோடு அவனுடைய விதி போராடி வென்றுவிட்டது. அவனுடைய வாழ்க்கை நூலை அந்தக் கயிற்றால் அறுக்க முடியவில்லை. அவன் கடலில் மிதந்து வந்தான்.

அவன்தான் சாதுவன். காவிரிப்பூம்பட்டினத்தில் அவன் ஒரு பெரிய வணிகன். கப்பல் வியாபாரம் செய்பவன். அவனுடைய மனைவி ஆதிரை. சாதுவனுக்கு அம்மனைவியால் மிக்க பெருமை உண்டாயிற்று. அவள் அத்தகைய கற்பரசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/64&oldid=1549154" இலிருந்து மீள்விக்கப்பட்டது