பக்கம்:புது மெருகு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

புது மெருகு

கையில் இருந்த பணம் செலவழிந்துவிட்டமையால் திரைகடலோடித் திரவியந் தேட எண்ணிப் புறப்பட்டான் சாதுவன். ஒரு கப்பலில் ஏறினான். கப்பல் கடலுக்கு இரையாயிற்று. அவன் தப்பினான்.

ஆனாலும் என்ன? கடலிலே எவ்வளவு நாளைக்கு மிதக்க முடியும்? ஆகாரம் வேண்டாமா? குடிக்க ஜலம் வேண்டாமா? உடம்பில் பலம் வேண்டாமா? இடையிலே திடீரென்று ஒரு திமிங்கிலம் வந்து அவனை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? கடலின் வெள்ளலைக் கைகளோடு அவன் கைகள் போராடின. புத்த தேவனுடைய ஸ்மரணம் ஒன்றுதான் அவனுக்கு உற்சாகம் உண்டாக்கியது.

"ஹா !" என்று அவன் மகிழ்ச்சியோடு வீரிட்டுக் கத்தினான் அவன் கண்ணுக்கு ஒரு தீவு தெரிந்தது. பச்சைப் பசேலென்று அடர்ந்திருந்த மரங்கள் அவன் கண்ணுக்குப் புலப்பட்டன.அவனுடைய கைகளுக்கு முறுக்கேறியது. தன்னுடைய முழுப் பலத்தோடும் நீந்த ஆரம்பித்தான். நீந்த நீந்தத் தீவு விலகிக்கொண்டே போவதுபோல் இருந்தது அவனுக்கு. உண்மையில் அது நெருங்கியது. இதோ வந்துவிட்டான். இன்னும் பத்துமரர் தூரம் கூட இல்லை; அவன் கால் நிலைத்துவிட்டது. ஆனால் கால் கீழே ஊன்றவில்லை; அவனுடைய சந்தோஷம் அவனுக்கு அதிகப் பலவீனத்தை உண்டாக்கியது. தட்டுத் தடுமாறிக் கரைக்கு ஓடினான். அங்கிருந்த ஒரு மரத்தடியில் விழுந்தவன் தான்; இந்த உலகத்தையே மறந்துவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/65&oldid=1549155" இலிருந்து மீள்விக்கப்பட்டது